Published : 04 Feb 2015 10:01 AM
Last Updated : 04 Feb 2015 10:01 AM
பன்றிக் காய்ச்சல் நோயால் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அரசு ஆசியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் தெலங்கானாவில் நேற்று இதே நோயால் 2பேர் பலியாயினர்.
தெலங்கானா, ஆந்திராவில் மட்டுமின்றி ராஜஸ்தான், கர்நாடகா, கோவா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தற்போது பன்றிக் காய்ச்சல் நோய் தீவிரமாக பரவி பலரை பலிகொண்டு வருகிறது.
தெலங்கானா மாநிலத்தில் மட்டும் 1,500-க்கும் மேற்பட்டவர் களுக்கு இந்நோயின் அறிகுறி தென்பட்டதால் பல்வேறு மருத்துவ மனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 556 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர்களில் இதுவரை 35 பேர் பலியாகி உள்ளனர்.
இந்நிலையில் நேற்று செகந்திராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவர் உயிரிழந்தனர். இதுதவிர பன்றிக் காய்ச்சல் நோய் காரணமாக பச்சிளங்குழந்தை ஒன்று பிறந்த சில மணி நேரத்திலேயே உயிரிழந்தது.இதனால் பலி எண்ணிக்கை 37ஆக உயர்ந்துள்ளது
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், புங்கனூரைச் சேர்ந்த அரசு ஆசிரியர் சோமிராஜு (45), கடந்த ஒரு மாதமாக பன்றிக் காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்ததாக சித்தூர் மாவட்ட மருத்துவத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆந்திராவில் விசாகப்பட்டினம் மாவட்டத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கீதாவுக் கும் இந்நோய் இருப்பதை மருத்து வர்கள் உறுதிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையில் அமைச்சர்கள், மருத்துவத் துறை அதிகாரிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
இதில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட அரசு மருத்துவ மனைகளில் தனி வார்டுகள் அமைப்பதுடன் போதிய முக கவசங்கள், மருந்துகள் தயார் நிலையில் இருத்தல் அவசியம் என முதல்வர் உத்தரவிட்டார்.
மேலும் ராயலசீமா, கடலோர ஆந்திரா, ஆகிய இரு பகுதிகளிலும் 3 நிவாரண மையங்களை திறக்க உடனடியாக ஏற்பாடு செய்யும் படியும் உத்தரவிடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT