Published : 02 Feb 2014 08:41 AM Last Updated : 02 Feb 2014 08:41 AM
புதிய அணி: பிப். 5-ல் ஆலோசனை- இடதுசாரிகள், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி தலைவர்கள் பங்கேற்பு
தேசிய அளவில் மூன்றாவது அணி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தை டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் ராம்விலாஸ் பாஸ்வானின் லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளுடன் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. தொகுதிப் பங்கீடுகளும் முடியும் நிலையில் உள்ளதாகத் தெரிகிறது.
இதையடுத்து பீகாரில் ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- காங்கிரஸ் கூட்டணி இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் நிதிஷ்குமார், 'பாஜக கூட்டணிக்கு திரும்பும் எண்ணம் இல்லை' என்று தெளிவுபடுத்தினார்.
இதை தொடர்ந்து மூன்றாவது அணிக்கான பேச்சுகள் இப்போதே தொடங்கிவிட்டன. இதுதொடர்பாக பிப்ரவரி 5-ல் டெல்லியில் பேச்சுவார்த்தை நடைபெறும் என ஐக்கிய ஜனதா தளம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த கூட்டம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் ஆகியோர் தொலைபேசியில் ஆலோசனை நடத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.
மூன்றாவது அணியில் ஒடிசா முதல்வரும் பிஜு ஜனதா தளத் தலைவருமான நவீன் பட்நாயக், அதிமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதா உள்பட 14 கட்சிகளை இழுக்கும் முயற்சி நடந்து வருகிறது.
நிதிஷ்குமார் பேட்டி...
இந்நிலையில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைநகர் பாட்னாவில் செய்தி யாளர்களுக்கு சனிக்கிழமை அளித்த பேட்டியில் கூறியதாவது: மூன்றாவது அணியை உருவாக்கும் முயற்சியில் இடதுசாரி கட்சிகள் ஈடுபட்டுள்ளன.
அதன்படி காங்கிரஸ், பாஜகவை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டம் டெல்லியில் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெறுகிறது. அந்த கூட்டத்தில் நானும் கலந்து கொள்கிறேன் என்றார்.
இதனிடையே 3-வது அணி குறித்து 'தி இந்து'விடம் பேசிய ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி எம்.பி., '3-வது அணி தொடர்பாக முதல்கட்டமாக கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். பிப்ரவரி 9-ம் தேதிக்குப் பிறகு மற்ற கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை தொடரும். காங்கிரஸ் அல்லது பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் எண்ணம் எங்களுக்கு இல்லை' எனத் தெரிவித்தார்.
முலாயம் சிங்கும் ஆதரவு...
உத்தரப் பிரதேச தலைநகர் லக்னௌவில் சமாஜ்வாதியின் சைக்கிள் பேரணியை தொடங்கிவைத்து முலாயம்சிங் பேசியபோது, 'உத்தரப் பிரதேசத்தில் நாம் ஆட்சியைப் பிடித்துவிட்டோம். அடுத்து டெல்லியையும் பிடிக்க தயாராகி வருகிறோம். மக்களவைத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சி முக்கிய அங்கம் வகிக்க இருக்கிறது' எனக் கூறியுள்ளார்.
மூன்றாவது அணிக்கான முயற்சி கடந்த ஆண்டு அக்டோபரிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியால் தொடங்கப்பட்டது. இதற்காக, மதவாத சக்திகளை எதிர்க்கும் அரசியல் கட்சிகள் கூட்டம் கடந்த அக்டோபர் 17-ல் நடத்தப்பட்டது.
பிப்ரவரி 5-ல்...
இதில் தேவகவுடா, முலாயம் சிங், நிதிஷ்குமார், சரத் யாதவ் ஆகியோருடன் 19 கட்சிகளின் தலைவர்கள் ஒரே மேடையில் கலந்து கொண்டனர். மார்க்சிஸ்ட் கட்சியின் கடும் முயற்சி காரணமாக தேசியவாத காங்கிரஸ், பிஜு ஜனதா தளம், அதிமுக, ஜார்க்கண்ட் விகாஸ் பரிஷத், அசாம்கண பரிஷத் ஆகிய கட்சிகளும் கூட்டத்தில் பங்கேற்றன.
வரும் 5-ம் தேதி டெல்லியில் நடைபெறும் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங், மதச்சார்பற்ற ஜனதாதள கட்சித் தலைவர் தேவகவுடா, பிஜு ஜனதா தளத் தலைவர் நவீன் பட்நாயக், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவர் சரத் யாதவ், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
WRITE A COMMENT