Published : 08 Feb 2015 11:24 AM
Last Updated : 08 Feb 2015 11:24 AM
சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல்வர் ரமன் சிங் தலைமையிலான பாஜக அரசு, காதலர் தினம் இனி பெற்றோர் தினமாக அனுசரிக்கப்படும் என்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக பெற்றொர் தினம் அந்த மாநிலத்தில் அனுசரிக்கப்பட்டு வந்தாலும், இப்போது அதிகாரபூர்வமாக பிப்.14ஆம் தேதி பெற்றோர் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே, பிப்ரவரி 14ஆம் தேதியன்று சத்தீஸ்கரில் இனி காதலர் தினம் அல்ல. அது பெற்றோர்களை போற்றும், வழிபடும் தினம். சிறையில் இருக்கும் அசாரம் பாபு இதே கருத்தை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
"2013 மற்றும் 2014ஆம் ஆண்டு மாதா-பிதா தினமாக பிப்ரவரி 14ஆம் தேதி அனுசரிக்கப்படும் என்று மாநில அரசு சுற்றறிக்கை அனுப்பியது. இப்போது அது முழு நடைமுறைக்கு வருகிறது. இது குறித்த புதிய உத்தரவுகள் இனி எதுவும் பிறப்பிக்கப்படப் போவதில்லை, ஒவ்வொரு ஆண்டும் பிப்.14ஆம் தேதி இனி பெற்றோர் தினமே.” என்று சத்தீஸ்கர் மாநில கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இந்த நாளில் பள்ளிகளில் மாணவ-மாணவிகள் தங்கள் பெற்றோர்களை அழைத்து வந்து அவர்களை வழிபடவேண்டும். என்று அனைத்துப் பள்ளிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர் மாநில கல்வித்துறை அமைச்சர் கேதர் காஷ்யப் இது குறித்து கூறும்போது, "இது புதிது அல்ல. 4 ஆண்டுகளாக பெற்றோர் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனால் காதலர் தினத்தை மறுப்பதோ, அதனை கொண்டாடக்கூடாது என்பதோ இந்த உத்தரவின் நோக்கமல்ல.” என்றார்.
மேலும் இது பற்றி கேட்ட போது, ஆர்.எஸ்.எஸ். அல்லது விஸ்வ இந்து பரிஷத் அமைப்புகள் நெருக்கடி கொடுக்கவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT