Last Updated : 24 Feb, 2015 09:32 AM

 

Published : 24 Feb 2015 09:32 AM
Last Updated : 24 Feb 2015 09:32 AM

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீட்டு விசாரணை: தனியார் நிறுவனங்களுக்கு எங்கிருந்து வருமானம் வந்தது? - கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இணைக்கப் பட்டுள்ள தனியார் நிறுவனங் களுக்கு வருமானம் எங்கிருந்து வந்தது? அதற்கான வருமான ஆதாரங்கள் என்னென்ன என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள 6 தனியார் நிறுவனங்களின் மேல் முறையீட்டு மனுக்கள் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தன.அப்போது மெடோ அக்ரோ ஃபார்ம்,ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆதித்யா சோந்தி, குலசேகரன் ஆஜராகினர்.

மூத்த வழக்கறிஞர் ஆதித்யா சோந்தி வாதிட்டதாவது:

சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள மெடோ, ரிவர்வே அக்ரோ ஃபார்ம் ஆகிய நிறுவனங்கள் அதன் பங்குதாரர் களுக்கு சொந்தமானவை அல்ல. அதேபோல 1991-96 காலகட்டத்தில் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்களாக இருந்த சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் சொந்தமானது அல்ல.தனிநபரின் ஒத்துழைப்பு இல்லாமல் கூட்டு முயற்சியால் அந்நிறுவனங்கள் சுதந்திரமாக இயங்கின.

இதில் மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவனத்திற்கு ரூ.1.5 கோடி மதிப்பிலான பங்குகளும் ரிவர்வே அக்ரோ ஃபார்ம் நிறுவனத்திற்கு 1.75 கோடி மதிப்பிலான பங்குகளும் இருந்தன. இதில் சுதாகரன் நிர்வாக இயக்குநராக இருந்தபோது கிருஷ்ணகுமார் ரெட்டி, அணில்குமார் ரெட்டி,சுப்புராம் ரெட்டி ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.3 லட்சம் மட்டுமே காசோலை வழங்கி இருக்கிறார். அந்த பணத்திற்கான வருமான ஆதாரம் வருமான வரித்துறையில் காட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் மெடோ அக்ரோ ஃபார்ம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.18 லட்சம் மதிப் புள்ள சொத்துகளையும்,ரிவர்வே அக்ரோ ஃபார்ம் நிறுவனத்திற்கு சொந்தமான ரூ.37 லட்சம் மதிப்புள்ள சொத்துகளையும் விசாரணை நீதிமன்றம் பறிமுதல் செய்துள்ளது. இது தொடர்பாக எவ்வித அறிவிப் பும் வெளியிடாமல் பறிமுதல் செய்தது சட்டப்படி செல்லாது.

இந்நிறுவனங்களில் பொது ஊழியரின் வருமானத்தை பயன்படுத்தப்பட்டதாக எங்கேயும் நிரூபிக்கப்படவில்லை.எனவே மெடோ,ரிவர்வே ஆகிய இரு நிறுவனங்களின் சொத்துக்களை பறிமுதல் செய்தது சட்டப்படி தவறு''என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி,''இத்தனை ஆண்டுகளாக உங்களது நிறுவனத்தையும் அதன் சொத்துகளையும் பாதுகாக்க உங்களது தரப்பில் தாக்கல் செய்த மனுக்களை சென்னை நீதிமன்றமும், பெங்களூரு சிறப்பு நீதிமன்றமும் தள்ளுபடி செய்துவிட்டன.

குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ததில் இருந்து தீர்ப்பு வெளியான வரை உங்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

எனவே குற்றம்சாட்டப்பட்ட நிறுவனங்களின் சொத்துகளை அறிவிப்பு வெளியிடாமல் பறிமுதல் செய்தது சட்டப்படி தவறு அல்ல.15 ஆண்டுகளுக்கும் மேலாக நிறுவன‌ங்களின் சொத்துகளை மீட்க முயற்சிக்காமல் இருந்துவிட்டு தற்போது அனைத்தையும் த‌வறு என கூறுவதை ஏற்க முடியாது. உங்களுடைய நிறுவனங்களுக்கு

வருமான‌ம் எங்கிருந்து வந்தது? அதற்கான வருமான ஆதாரங்கள் என்னென்ன என்பதை ஆதாரத்துடன் தாக்கல் செய்யுங்கள்''எனக்கூறி வழக்கை செவ்வாய்க்கிழமைக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x