Last Updated : 30 Apr, 2014 12:00 AM

 

Published : 30 Apr 2014 12:00 AM
Last Updated : 30 Apr 2014 12:00 AM

தற்கொலைப் படையினரால் மோடிக்கு ஆபத்து: பாதுகாப்பு கோரி குடியரசுத் தலைவருக்கு வி.எச்.பி. கடிதம்

பாரதிய ஜனதாவின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடிக்கு தற்கொலைப் படையினரால் ஆபத்து உள்ளது. அவருக்கு அளிக்கப்படும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று விஷ்வ இந்து பரிஷத் (வி.எச்.பி) தலைவர் அசோக் சிங்கால், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அவர் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மத்திய உள்துறை அமைப்புகள் நரேந்திர மோடியின் உயிருக்கு ஆபத்து உள்ளதாக அரசுக்கு தகவல்கள் அளித்துள்ளன. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்டதுபோல் இந்தத் தாக்குதல் இருக்கலாம் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்திய முஜாகிதீன், பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ, நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராகிம் மற்றும் அவர்கள் சார்ந்த அமைப்புகள் சதித் திட்டங்களை தீட்டியுள்ளனர். தாவூத் இப்ராகிமை கைது செய்து இந்தியாவிற்கு கொண்டு வருவதாக மோடி அண்மையில் பேசினார். அதன் பிறகு தீவிரவாதிகளின் செயல்பாடுகள் தீவிரமடைந்துள்ளதாகத் தெரிகிறது.

நீண்ட காலமாக நமது நாட்டின் மிகப்பெரிய சவாலாக தீவிரவாதம் உள்ளது. இதை அரசு புரிந்துகொண்டு தீவிரவாத அமைப்புகளை செயலிழக்கச் செய்து அதன் முழு இயக்கத்தையும் கூண்டோடு ஒழிக்க வேண்டும். இதன் முக்கிய தலைவர்கள் மற்றும் தீவிரவாதிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி மோடியின் பாதுகாப்புக்கு வழிவகை செய்ய வேண்டும்.

நரேந்திர மோடி தொடர்ந்து பல ஆண்டுகளாக தீவிரவாதிகள் குறிவைத்துள்ள பட்டியலில் இருந்து வருகிறார். அவர் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு கடந்த ஆண்டு பாட்னாவில் நடைபெற்ற மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது.

இந்திய முஜாகிதீன் தீவிரவாதக் குழுவின் தலைவர் யாசின் பட்கல், ‘மோடியை கொல்வதற்காக எதையும் செய்வோம். எவ்வளவு வேண்டுமானாலும் கொடுப்போம்’ எனக் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தான் தீவிரவாதியான மவுலானா மசூத் அசார், ‘மோடி பிரதமரானால் அவரைக் கொல்வோம்’ என அறிவித்து அதற்காக தற்கொலைப் படையினருக்கு பயிற்சி அளித்து வருகிறார்.

எனவே இதுகுறித்து நாட்டின் மிகவும் உயரிய அலுவலகமான குடியரசுத் தலைவரிடம் முறையிட்டுள்ளோம். மத்திய அரசு மற்றும் மாநில அரசுகள் மூலமாக நரேந்திர மோடியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x