Published : 17 Feb 2015 04:01 PM
Last Updated : 17 Feb 2015 04:01 PM
பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் அந்த பெண்ணுக்கு ரூ.31,000 அளிக்க வேண்டும் என்றும் அதன் பிறகு இந்தச்சம்பவத்தை அந்தப் பெண் மறந்து விட வேண்டும் என்றும் பிஹார் கிராம பஞ்சாயத்து ஒன்று அளித்த தீர்ப்பினால் சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.
குற்றம்சாட்டப்பட்டவர் பிஹார் மாநிலத்தில் உள்ள நவாதா மாவட்டத்தில் செல்வாக்கு மிகுந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர், பஞ்சாயத்தின் இந்தத் தீர்ப்பை ஏற்க மறுத்து, பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கடுமையாக மிரட்டியுள்ளார்.
இது குறித்து காவல்துறை அதிகாரி விரேந்திர குமார் சாஹு கூறும் போது, “குற்றம்சாட்டப்பட்டவர் குடும்பத்தினர் பாதிக்கப்பட்ட பெண்ணையும் அவரது குடும்பத்தினரையும் ‘விளைவுகளைச் சந்திக்க வேண்டி வரும்’ என்று மிரட்டியுள்ளனர்” என்றார்.
மிரட்டலையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் காவல்துறை உதவியை நாடியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் முதலில் புகாரை வாங்க மறுத்துள்ளனர். ஆனால், உள்ளூர் ஊடகங்கள் இந்த விவகாரத்தை கையிலெடுக்க காவல்துறையினர் கடைசியாக எப்.ஐ.ஆர். பதிவு செய்தனர்.
கடந்த வாரம் இந்த பாலியல் பலாத்கார சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணைக் கடத்திச் சென்று 2 நாட்கள் அவரை பலாத்காரம் செய்ததாக போலீஸ் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளது.
தொடர்ந்து பிஹார் பஞ்சாயத்தில் குற்றம் செய்தோரைக் காப்பாற்றும் முயற்சிகள் நடைபெறுவதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாதம் மஹாதலித் வகுப்பைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு இதே கதி ஏற்பட்டது. அந்த வழக்கிலும் கதிஹார் மாவட்ட பஞ்சாயத்து ஒன்று பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.41,000 அளிக்குமாறும், அதன் பிறகு அந்தப் பெண் காவல்துறையில் புகார் செய்ய கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு, சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவத்தில் ரூ.50,000 கொடுத்து விடுவதாகவும் அந்தச் சிறுமி தனது கருவைக் கலைத்து விடுமாறும் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பஞ்சாயத்து தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT