Last Updated : 18 Feb, 2015 06:07 PM

 

Published : 18 Feb 2015 06:07 PM
Last Updated : 18 Feb 2015 06:07 PM

நில அவசரச் சட்டத்தை மக்களவையில் கடுமையாக எதிர்ப்போம்: காங்கிரஸ்

வரவிருக்கும் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது மத்திய அரசின் நில அவசரச் சட்டத்தை கடுமையாக எதிர்க்கப்போவதாக காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

அந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால் ஏழைகள், விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதோடு, வலுக்கட்டாயமாக நில அபகரிப்பு செய்வதையும் நியாயப்படுத்துவதாக அமையும் என்று காங்கிரஸ் கருதுகிறது.

இது பற்றி காங்கிரஸ் எம்.பி.ஜெய்ராம் ரமேஷ் கூறும்போது, "இந்த அவசரச்சட்டத்தை ‘கருப்பு அவசரச்சட்டம்’ என்றே அழைக்க வேண்டும். இதனை நாங்கள் மக்களவையில் எதிர்க்கப்போவது உறுதி. இந்த அவசரச் சட்டத்தை எதிர்த்து பொது ஊர்வலங்கள் நடத்தி வருகிறோம்.

இந்த எதிர்ப்பில் காங்கிரஸ் மட்டும் தனித்துச் செயல்படவில்லை. ஏழைகளுக்கும், விவசாயிகளுக்கும் எதிரான இந்த சட்டத்தை எதிர்ப்பதில் பல எதிர்க்கட்சிகளும் முனைப்புடன் உள்ளன.

இந்த சட்டம், 1894ஆம் ஆண்டு நடைமுறைக்கு வழிவகுக்கிறது. அதாவது மாவட்ட ஆட்சியர் வசம் அனைத்து அதிகாரங்களும் குவிக்கப்படும். நாம் இந்த அதிகாரத்தை மாவட்ட ஆட்சியரிடமிருந்து பிடுங்கி கிராம சபையிடம் அளித்து விட்டோம்.

நாங்கள் (ஐ.மு.கூ) 2013-இல் இந்தச் சட்டத்தை கொண்டு வந்தபோது நில உரிமையாளர்களுக்கு மட்டுமல்ல, வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் இழப்பீடு கொடுக்க வழிவகை செய்திருந்தோம். ஆனால் தற்போது இந்த அவசரச் சட்டம், நடைமுறைச் சட்டமானால் இழப்பீடு என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போய் விடும். எனவே, இப்படியாக 1894ஆம் ஆண்டுக்கு பின்னோக்கி நகர்வதாகும் இந்த புதிய சட்டம்.

2013ஆம் ஆண்டு பாஜக இந்தச் சட்டத்தை ஆதரித்தது. அனைத்துக் கட்சிகளுமே இதனை ஆதரித்தன. 2 முறை அனைத்துக் கட்சி கூட்டங்கள் நடத்தப்பட்டன. பாஜக கூறிய 3 திருத்தங்களும் எங்களால் சட்டத்திற்குள் சேர்க்கப்பட்டது. மக்களவையில் 15 மணி நேர விவாதம் நடைபெற்றது. இதில் 65 கட்சிகள் பங்கேற்றன.

அப்போது ராஜ்நாத் சிங் லோக்சபாவில் தொடக்க வீரர், மாநிலங்களவையில் வினய் கடியார் தொடக்க வீரர். இப்போது 8 மாதங்களில் பாஜக யு-டர்ன் அடித்துள்ளது.”

இவ்வாறு கூறினார் ஜெய்ராம் ரமேஷ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x