Published : 15 Feb 2015 11:32 AM
Last Updated : 15 Feb 2015 11:32 AM
நாகார்ஜுன சாகர் அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடுவதில், ஆந்திரா - தெலங்கானா இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மாநில ஆளுநர் தலையிட்டதை தொடர்ந்து சுமுகத் தீர்வு காணப்பட்டது.
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா, ஆந்திர மாநிலம் குண்டூர் இடையே மிகப்பெரிய நாகார்ஜுன சாகர் அணை நிறுவப் பட்டுள்ளது. இந்த அணை மூலம் இரு மாநிலங்களிலும் சுமார் 10 மாவட்டங்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை அணையி லிருந்து தண்ணீரை வெளியேற்ற மாட்டோம் என்று கூறி தெலங்கானா நீர்வளத்துறை அதிகாரிகள் பம்பிங் அறைக்கு பூட்டு போட்டனர். இதனால் விவாதம் முற்றியது.
இதைத் தொடர்ந்து அங்கு பதற்றம் நிலவியது. இதை கட்டுப்படுத்த இரு மாநில போலீஸாரும் குவிக்கப்பட்டனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டு இரு மாநில போலீஸாரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் 8 போலீஸார் காயமடைந்தனர். இதனால் அணை பிரச்சினை தீவிரமானது.
இந்நிலையில் தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று முன்தினம் இரவு தொலைபேசியில் பேசினார். இதைத் தொடர்ந்து இருமாநில முதல்வர்கள், நீர்வளத்துறை அமைச்சர்கள், அதிகாரிகள் ஆகியோர் ஹைதராபாத்தில் ஆளுநர் ஈ.எஸ்.எல். நரசிம்மன் முன்னிலையில் நேற்று காலை பேச்சு நடத்தினர்.
முன்னதாக இரு முதல்வர் களுடன் ஆளுநர் தனித்தனியே பேசி, கருத்துகளை கேட்டறிந்தார். பின்னர் இரு மாநிலத்துக்கும் தேவையான தண்ணீரை பிரச்சினையின்றி பங்கீடு செய்துகொள்ளுமாறு அறி வுறுத்தினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில், வரும் மார்ச் இறுதிக்குள் 10 டிஎம்சி நீரை ஆந்திராவுக்கு தெலங்கானா திறந்துவிடும் என முடிவு செய்யப்பட்டது. மேலும் தண்ணீர் பங்கீடு குறித்து இரு மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் கலந்தாலோசித்து அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் என்றும், இதுகுறித்து மீண்டும் ஆளுநர் முன்னிலையில் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு காணவேண்டும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.
இதனை பின்னர் செய்தி யாளர்களை சந்தித்த இரு மாநிலங் களின் நீர்வளத்துறை அமைச்சர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT