Published : 20 Feb 2015 10:36 AM
Last Updated : 20 Feb 2015 10:36 AM
பிரதமர் நரேந்திர மோடி அணிந்த கோட், ரூ.1.41 கோடிக்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது. இன்று மாலை முடியும் ஏலத்தில் அதிகத் தொகைக்கு கேட்பவருக்கு கோட் வழங்கப்பட உள்ளது.
கடந்த மாதம் அமெரிக்க அதிபர் ஒபாமா டெல்லி வந்தபோது, கோடு போட்ட கோட் அணிந்திருந்தார் பிரதமர் மோடி. அதில் `நரேந்திர தாமோதர் தாஸ்’ என்று பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் விலை ரூ.10 லட்சம் என்று கூறப்பட்டது. எளிமை எளிமை என்று பேசும் மோடி, விலை உயர்ந்த கோட் அணிந்துள்ளார் என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலர் கடுமையாக விமர்சனம் செய்தனர்.
இந்நிலையில், மோடி அணிந்த அந்த உடையை ஏலம் விட்டு அதில் கிடைக்கும் பணத்தை கங்கை நதி தூய்மைத் திட்டத்துக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி சூரத் நகரில் கோட் ஏலம் நேற்றுமுன்தினம் தொடங்கியது. இந்த ஏலம் நாளை மாலை 5 மணிக்கு முடிகிறது.
அதிக தொகைக்கு ஏலம் கேட்பவர்களுக்குக் கோட் வழங்கப்படும் என்று சூரத் நகராட்சி ஆணையர் மிலிந்த் தோரவேன் கூறினார். நரேந்திர மோடி பிரதமர் பதவியேற்ற பின் கடந்த 7 மாதங்களில் அவருக்கு வந்த 455 பரிசுப் பொருட்களும் ஏலத்தில் விடப்படுகின்றன.
முதல் நாள் ஏலத்தில் மோடியின் உடையை ராஜு அகர்வால் என்பவர் முதலில் ரூ.51 லட்சத்துக்கும், தொழிலதிபர் சுரேஷ் அகர்வால் என்பவர் ரூ.1 கோடிக்கும், குஜராத்தை சேர்ந்த வெளிநாட்டு வாழ் இந்தியர் விரால் சவுக்கி என்பவர், ரூ.1.11 கோடிக்கும் ஏலம் கேட்டனர். இந்நிலையில் 2-ம் நாள் ஏலம் நேற்று காலை தொடங்கியது. அப்போது மகேஸ்வரி என்பவர் ரூ.1.25 கோடிக்கு மோடியின் உடையை ஏலம் கேட்டார்.
‘உலக மோடி ரசிகர்கள் கிளப்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறார் மகேஸ்வரி. இவர் கூறுகையில், “சமூக வலைதளங்களில் நாங்கள் 5,000 பேர் நண்பர்களாக இருக்கிறோம்.
ஒவ்வொருவரும் ரூ.50 ஆயிரம் தந்தால், மோடியின் உடையை ஏலம் எடுக்கலாம் என்று நண்பர்களிடம் கூறினேன். அவர்களும் ஒப்புக் கொண்டனர்.
ஏலத்தில் எங்களுக்கு கோட் கிடைத்தால், அதை திருமணங்களுக்கு வாடகைக்கு கொடுப்போம். அல்லது மோடி கோட் அருகில் நின்று புகைப்படம் எடுக்க அனுமதிப்போம். அதில் கிடைக்கும் பணத்தை சமூக சேவைகளுக்குப் பயன்படுத்துவோம்’’ என்றார்.
பிற்பகல் சூரத்தை சேர்ந்த வைர வியாபாரி முகேஷ் படேல் என்பவர், அந்த உடையை ரூ.1.39 கோடிக்கு ஏலம் கேட்டார். அவரை தொடர்ந்து பாவ்நகரை சேர்ந்த கப்பல் உடைக்கும் நிறுவனம் நடத்தி வருபவரும் வைர வியாபாரியுமான கோமல்காந்த் ஷர்மா என்பவர், மோடியின் உடையை ரூ.1.41 கோடிக்கு ஏலம் கேட்டார். கோமல்காந்த் ஷர்மா கூறுகையில், `மோடியின் கோட் ஏலத்தில் கிடைக்கும் பணத்தில் கங்கை நதி தூய்மைப்படுத்தப்பட உள்ளது.
அந்த அருமையான திட்டத்துக்கு எனது பணம் உதவ வேண்டும் என நினைக்கிறேன். நாளையும் (இன்று) நான் ஏலத்தில் கலந்து கொள்வேன். தேவைப்பட்டால் ஏலத் தொகையை உயர்த்தி மோடியின் உடையை வாங்க முயற்சிப்பேன்’’ என்றார். இதனால் ஏலத் தொகை இன்னும் உயரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வைர வியாபாரி முகேஷ் பட்டேல் முந்தைய தனது ஏலத்தொகையை உயர்த்தி ரூ.1.48 கோடிக்கு உடையை ஏலம் கேட்டார்.
இதற்கிடையில், மோடி அணிந்த அந்த உடையை ஏலம் விடுவதற்கு காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஏலத்தை உடனடியாக ரத்து செய்து, அந்த உடையை அரசு கருவூலத்தில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT