Published : 18 Feb 2015 03:23 PM
Last Updated : 18 Feb 2015 03:23 PM
இயற்கை எரிவாயு குறித்த சமீபத்திய கொள்கைகள் அர்த்தமற்றதாக உள்ளது என்று உலகப் புகழ்பெற்ற எரிசக்தித்துறை நிபுணர் ஃபெரெய்டுன் பெஷரகி என்பவர் தெரிவித்துள்ளார்.
இவர் ஃபேக்ட்ஸ் குளோபல் எனர்ஜி-யின் தலைவர் ஆவார்.
எரிவாயு கண்டுபிடிப்பு, மற்றும் உற்பத்திக்கு அரசு நிர்ணயிக்கும் விலை குறைவாக உள்ளது, என்றும் சந்தைக்கேற்ப இருப்பதில்லை என்றும் உறுதியான கொள்கைகள் இல்லை என்றும் அவர் கூறுகிறார்.
உத்தரவாதமான சந்தைவிலைகள் , நிலையான கொள்கைகள் இருந்தால்தான் உலக அளவில் முதலீட்டை ஈர்க்க முடியும், இப்போது இந்தியாவில் மேற்கொள்ளப்படும் எரிவாயுக் கொள்கைகளினால் முதலீட்டை ஈர்ப்பது கடினம் என்கிறார் அவர்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கான விலையை அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஆகிய நாடுகளின் சராசரி விலைகளுக்கு ஏற்ப நிர்ணயிப்பது, "சான்பிரான்சிஸ்கோவில் வீடு வாங்க டெல்லியில் உள்ள விலையைக் கொண்டு மதிப்பிடுவது போன்ற அர்த்தமற்ற செயல்” என்கிறார்.
மேலும் அவர் கூறியதாவது, “அமெரிக்கா, கனடா, ரஷ்யா ஆகிய நாடுகள் எரிவாயு உற்பத்தியில் எங்கோ இருக்கிறது. எப்போதோ மிகுதி நிலை எட்டிவிட்டது. நாம் எதற்காக அவர்களது விலை நிர்ணயக் கொள்கைகளைக் கடைபிடித்து இந்தியாவுக்கான எரிவாயு விலையை நிர்ணயிக்க வேண்டும்? இது அர்த்தமற்றதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் எரிவாயு விலை நிர்ணயம் செய்கிறார்கள் என்றால் அந்த நாட்டில் எரிவாயு அளவுக்கு அதிகமாக உள்ளது, எனவே அங்கு ஏற்றுமதி மிக முக்கியம், ஏற்றுமதி அனுமதிக்கப்படும்போதெல்லாம் அங்கு விலை உயர்வு ஏற்படுவது சகஜம்.
ரஷ்யாவிலும் எரிவாயு விலை சந்தைகளின் தேவைகளுக்கேற்ப நிர்ணயிக்கப்படுவதில்லை. ஏனெனில் அந்த நாடும் எரிவாயு உற்பத்தியில் கரைகண்ட நாடு.
மேலும் நாடுகளைக் கடந்து குழாய்கள் மூலம் எரிவாயுவை துர்க்மெனிஸ்தான் - ஆப்கான் - பாகிஸ்தான் - இந்தியா என்று கொண்டுவருவது என்பது அதிக செலவு பிடிக்கக் கூடியது. இதற்கிடையே பதட்டமான நாடுகள் வழியாக வரும் பைப் லைன்கள் வெடிவைத்துத் தகர்க்கப்படாமல் இருக்க வேண்டும்.
எனவே, “சந்தை விலைகள் மற்றும் நிலையான ஒழுங்குமுறைத் திட்டம் இருந்தால் மட்டுமே இந்தியாவில் முதலீடு செய்ய வருவார்கள். இது சரிசெய்யப்படாத நிலையில் இந்தியாவில் எந்த நிறுவனமும் முதலீடு செய்யும் முடிவை எடுப்பது மிகமிகக் கடினம்.
தற்போது எரிவாயுவுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை ஒரு mmBtu-வுக்கு அமெரிக்க விலையான 4.2 டாலர்களை விடவும் 33% அதிகமானது. ஆனால் முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நிர்ணயித்த விலையை விட குறைவானதே.
ரிலையன்ஸ் நிறுவனத்துக்கு சற்று பலன் கூடுதலாகக் கிடைக்கும் என்ற எந்த ஒன்றையும் தற்போதைய அரசு ஊக்குவிக்க விரும்பவில்லை என்று தெரிகிறது.
பிரச்சினை தற்போது ரிலையன்ஸ் கூட அல்ல, பொதுத்துறை நிறுவனமான ஓ.என்.ஜி.சி. கூட பிரச்சினையில் உள்ளது. இந்த நிறுவனம் எரிவாயு ஆதாரங்களை நம்பியே உள்ளது, ஆனால் உற்பத்தி வளர்ச்சிக்கு மறுப்பதற்குக் காரணம் அரசு நிர்ணயிக்கும் விலை குறைவாக இருக்கிறது என்பதே.
பெட்ரோல் விலைகளில் தைரியமான முடிவுகளை எடுத்து சந்தை விலைகளுக்கு ஏற்ப மாறுமாறு செய்ததைப் போல் ஏன் எரிவாயுவிலும் செய்யக் கூடாது? எரிவாயுக் கொள்கையில் மிகப்பெரிய இடைவெளி உள்ளது. இத்தனைக்கும் இந்தியாவில் பெட்ரோலை விட எரிவாயுதான் அதிகம் கிடைக்கிறது.
எனவே எரிவாயு உற்பத்திக்கு அரசு நிர்ணயிக்கும் விலை ஒரு mmBtu-வுக்கு 10 அமெரிக்க டாலர்களாக நிர்ணயிக்கப்படவேண்டும்.
விலையை குறைவாக நிர்ணயிப்பதால் அயல்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய தயங்குகின்றன.” என்று கூறியுள்ளார் அந்த நிபுணர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT