Published : 24 Feb 2015 07:39 PM
Last Updated : 24 Feb 2015 07:39 PM
சர்ச்சைக் கருத்துகளுக்கு பெயர் பெற்ற பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் புதிய கருத்து ஒன்றைத் தெரிவித்து மீண்டும் சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆதித்யநாத், "மத மாற்றங்கள் தேசத்தின் மத நல்லிணக்கத்தையே சீர்குலைத்துவிடும். மத மாற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். மத மாற்றங்கள் ஓயும் வரை விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கர் வாப்ஸி நிகழ்ச்சிகள் நீண்டு கொண்டுதான் இருக்கும்.
முஸ்லிம்கள் வாழும் பகுதியில் இருந்துதான் தேச விரோதச் செயல்கள் உருவாகின்றன. இதற்கு மதச் சார்பற்றவர்கள் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களே பதிலளிக்க வேண்டும்.
இந்தியாவின் பிரச்சினை ஊட்டச்சத்து குறைபாடோ, வறுமையோ இல்லை. ஜிஹாதி உணர்வுகளால் தூண்டிவிடப்படும் வாக்கு வங்கி அரசியல்தான் இந்தியாவின் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது.
இந்து சமுதாயத்தில், இந்துக்கள் அனைவரும் பாதுகாப்பாக உணர்கின்றனர். ஒவ்வொரு தாயும், சகோதரியும் பாதுகாப்பு உணர்வுடன் உள்ளனர். இதேபோல், ஒவ்வொரு மதத்துக்கும் அதற்கான சுதந்திரம் இருக்கிறது.
அப்படி இருக்கும்போது, முஸ்லிம் மக்கள் மத்தியில் மட்டும் ஏன் அச்ச உணர்வு ஏற்படுகிறது? ஏன் தேச விரோதச் செயல்கள் அங்கிருந்து உருவாகின்றன. ஜிஹாதி உணர்வுகள் ஆட்கொள்வதற்கும், தேச விரோத கோட்பாடுகள் ஆக்கிரமிக்கவும் அவர்கள் எப்படி இடம் கொடுக்கிறார்கள்?
இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் துக்கம் அனுசரிப்பதும் தோல்வியுற்றால் பட்டாசு வெடித்தும் ஏன் கொண்டாடுகிறார்கள். இதற்கு மதச் சார்பற்றவர்கள் யாரேனும் பதிலளிக்க வேண்டும்" என்றார்.
ஏற்கெனவே அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி, எம்.பி. சாக்ஸி மஹாராஜ் ஆகியோர் தெரிவித்த இந்துத்துவா கருத்துகள் பாஜக அரசுக்கு தர்ம சங்கடமான சூழலை உருவாக்கின. டெல்லி தேர்தல் தோல்விக்கு இந்துத்துவா பிரச்சாரங்களும் காரணமாக சொல்லப்பட்டன. இந்நிலையில், பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் இத்தகைய கருத்தை தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையினர் 10 சதவீதத்துக்கு மேல் ஒரு பகுதியில் இருந்தாலே அங்கு வன்முறை ஏற்பட்டு விடுகிறது என்று பாஜக எம்.பி. யோகி ஆதித்யநாத் ஏற்கெனவே பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT