Last Updated : 14 Feb, 2015 06:23 PM

 

Published : 14 Feb 2015 06:23 PM
Last Updated : 14 Feb 2015 06:23 PM

ஏமனில் மோசமான அரசியல் சூழ்நிலை குறித்து இந்தியா கவலை

ஏமனில் மோசமடைந்துவரும் அரசியல் போக்குகளுக்காகவும் அதன் பாதுகாப்பற்ற சூழ்நிலைகளுக்காகவும் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது:

ஏமனில் அரசியல் மற்றும் பாதுகாப்பு சூழ்நிலைகள் மோசமடைந்துவருவதற்கு இந்தியா தனது கவலையை தெரிவித்துக்கொள்கிறது. இதில் அமெரிக்கா விரைவில் தலையிட்டு அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் முட்டுக்கட்டை நிலைக்கு உணர்வுபூர்வமான தீர்வு காண வேண்டும்.

ஏமனில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் தங்கள் வேறுபாடுகளை பேச்சுவார்த்தைகள் மூலமாகவோ, ஐ.நா.ஆலோசனைகளுக்கு முழுமையாகக் கட்டுப்படுவதன் மூலமாகவோ, அமைதி அடிப்படையிலும் தேசிய கூட்டு ஒப்பந்தத்தையும், தேசிய கலந்துரையாடல் மாநாட்டின் முடிவுகளையும் பின்பற்றி உடனடியாக சுமுக தீர்வு காண வேண்டும்.

தற்போது எடுக்கப்பட்டுள்ள ஐ.நா. தூதர்களின் முயற்சி இன்றைய அரசியல் நெருக்கடியில் சிக்கியுள்ள ஏமன் மக்களுக்கு உதவும் என்று இந்திய நம்புகிறது. ஏமன் நாடு அமைதியாகவும் ஜனநாயகப்பூர்வமாகவும் இருத்தலே உலகத்தின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் உகந்தது எனவும் இந்தியா உறுதியாக நம்புகிறது.

இவ்வாறு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஜனவரியிலிருந்தே சில வாரங்களாக ஹூதி கிளர்ச்சியாளர்களின் பிடியில் ஏமனின் அதிகாரம் சிக்கியுள்ளது. இதனால் அந்நாடு அரசியல் கலவரங்களால் பீடிக்கப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையற்ற ஒரு போக்கினால் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் அங்குள்ள தங்கள் தூதரகங்களை மூடிவிட்டன.

ஹூதி கிளர்ச்சியாளர்கள் பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு நாட்டின் அதிபர் அப்து ராபு மான்சூரை கைதுசெய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து தங்கள் கட்டுப்பாட்டின்மூலம் அரசாங்கத்தையே முடக்கியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x