Published : 03 Feb 2015 06:00 PM
Last Updated : 03 Feb 2015 06:00 PM
"கலாய்ப்புகளுக்கும் எல்லை இருக்கிறது. தரக்குறைவான வார்த்தைகளால் பொது மேடையில் ஒருவொருக்கொருவர் வசைபாடிக் கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர்கள் அர்ஜூன் கபூர், ரன்வீர் சிங், இயக்குநர் கரன் ஜோஹார் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும்" என மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா எச்சரித்துள்ளது.
மேலும், "அவ்வாறு மன்னிப்பு கேட்காவிட்டால், எதிர்காலத்தில் மேற்கூறிய நடிகர்கள்; இயக்குநரின் படங்களை வெளியிட இடையூறு செய்வோம்" என்றும் அந்த அமைப்பு கண்டித்துள்ளது.
"ஆல் இந்தியா பக்சோட்" (All India Backchod) சுருக்கமாக ஏஐபி அழைக்கப்படும் அந்தக் குழு 'ஏஐபி நாக் அவுட்' என்ற நிகழ்ச்சியை மும்பையில் நடத்தியது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை ஓர்லி பகுதியில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பாலிவுட் நட்சத்திரங்களான அர்ஜுன் கபூர் மற்றும் ரன்வீர் சிங் இருவரையும் உட்காரவைத்து, 8 பேர் அடங்கிய அமர்வு மாற்றி மாற்றி அவர்களை கலாய்த்தனர்.
கலாய்ப்பது என்றால் சாதாரணமாக அல்ல, கெட்ட வார்த்தைகள், வசவு சொற்கள், ஆபாசச் செய்கைகள் என அனைத்து விதமாகவும் கலாய்க்கப்பட்டார்கள். சில நையாண்டி அவர்களது குடும்பத்தாரைப் பற்றியும், அவர்களது அந்தரங்கத்தைப் பற்றியதாகவும் இருந்தன.
மகாராஷ்டிரா நவ்நிர்மாண் சேனா காட்டம்:
இவற்றைச் சுட்டிக்காட்டிய மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனாவின் சினிமா பிரிவான மகாராஷ்டிரா நவ நிர்மாண் சித்ரபட் சேனாவின் தலைவர் அமேயா கோப்கர், ஏஐபி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் மன்னிப்பு கேட்கும் வரை அவர்கள் திரைப்படங்களை வெளியிடவிடமாட்டோம் என கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், "வெளி உலகிற்கு நாம் என்ன சொல்ல நினைக்கிறோம்? ரன்வீர், அர்ஜூன் போன்ற நடிகர்களை தங்கள் கனவு நாயகர்களாக நினைத்துக் கொண்டிருக்கும் சிறு பிள்ளைகள் இது மாதிரியான நிகழ்ச்சியைப் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? இப்படிப்பட்ட நிகழ்ச்சிகளைப் பார்த்தால் அவர்கள் எண்ணங்களில் கறை படியாதா? நாங்கள் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானவர்கள் அல்ல. ஆனாலும், கலாய்ப்புகளுக்கும் எல்லை இருக்கின்றன. இத்தகைய வரம்பு மீறும் நிகழ்ச்சிகளை சகித்துக் கொள்ள முடியாது" என வெகுண்டெழுந்துள்ளார்.
ஏஐபி நாக்அவுட்?
ஏஐபியின் நாக்அவுட் நிகழ்ச்சியின் பின்னணி இதுதான். 'ரோஸ்ட்' (Roast) எனப்படும் நகைச்சுவை வகை அமெரிக்காவில் மிகப் பிரபலம். ரோஸ்ட் என்றால் வறுப்பது என்று பொருள். பமீலா ஆண்டர்சன் உள்ளிட்ட பல நட்சத்திரங்களை உட்கார வைத்து இப்படி வாய்க்கு வந்தபடி 'வறுக்கும்' நிகழ்ச்சிகள் நடந்துள்ளன.
இந்தியாவில் முதன்முறையாக இப்படியான நிகழ்ச்சி நடந்துள்ளது. அதுதான் ஏஐபியின் நாக்அவுட் நிகழ்ச்சி.
கலாய்ப்பு நிகழ்ச்சியைச் சுற்றி இத்தனை சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தவர்களோ, "நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட சுமார் ரூ.40 லட்சம் பணத்தை பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டது" எனக் கூறுகின்றர். நல்ல காரியத்துக்காகத்தான் கலாய்த்துக் கொண்டோம் என்பது இவர்களது வாதம்.
சட்டத்தை கையில் எடுப்போம்:
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா பாலிவுட் நடிகர்களிடம் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ள நிலையில், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ ஜிதேந்திரா அஹ்வாது, ஏ.ஐ.பி. நிகழ்ச்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
"மாநில அரசு தலையிட்டு இத்தகைய நிகழ்ச்சிகளை தடை செய்யாவிட்டால், சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு நாங்கள் இது போன்ற நிகழ்ச்சிகளை தடுப்போம்" என ட்விட்டரில் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.
மகாராஷ்டிரா அரசு நிலைப்பாடு என்ன?
ஏஐபி நிகழ்ச்சிக்கு எதிரான குரல் வலுத்து வரும் நிலையில், மகாராஷ்டிரா மாநில அரசோ பட்டும்படாமல் ஒதுங்கிக் கொண்டுள்ளது.
"ஏஐபி நிகழ்ச்சியை நடத்த தடையில்லா சான்றிதழ்கள் பெறப்பட்டனவா, விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா என்பதை மட்டுமே அரசு கவனிக்க முடியும். அதை விடுத்து கலாச்சார காவலர்களாக இருக்க முடியாது" என அம்மாநில கலாச்சார அமைச்சர் வினோத் டாவ்டே தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார். இருப்பினும் நேற்று செய்தியாளர்களை சந்தித்தபோது, "ஏஐபி நிகழ்ச்சியை கலாச்சார துறை ஆய்வு செய்யும். புகார்களில் குறிப்பிட்டுள்ளதுபோல் நிகழ்ச்சி வக்கிரமாக இருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்" என கூறியிருந்தார்.
முன்னதாக, அமீர்கானின் பிகே படத்திற்கு எதிராக இந்து அமைப்புகள் போர்க்கொடி உயர்த்தியபோது, மகாராஷ்டிர அரசு பிகே படத்திற்கு தடை விதிக்கப்படமாட்டாது. தேவைப்பட்டால் போதிய பாதுகாப்புடன் படத்தை திரையிட ஏற்பாடு செய்யப்படுன் என குறிப்பிட்டிருந்தது என்பது கவனிக்கத்தக்கது.
ட்விட்டரில் ஆதரவும் எதிர்ப்பும்:
இதனிடையே, ஏ.ஐ.பி. நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்தும், கடும் எதிர்ப்பு தெரிவித்தும் ட்விட்டரில் இணையவாசிகள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். அவற்றில் சில:
ஏ.ஐ.பி.-க்கு எதிர்ப்பு: 'தேச அவமானம்'
தத்தாகத் காண்டேல்வால்: இதில் முக்கியமான விஷயமே, பரிகாசம் செய்யாத மக்களைப் புண்படுத்தியதும், செய்தவர்களைக் காயப்படுத்தாததும்தான்.
தருண் மன்சுகனி: அநாகரீக மற்றும் ஆபாசங்களை விசாரணைக்கு உட்படுத்தும் பாராளுமன்றத்தின் அமர்வு எங்கே போனது?
லிண்ட்சே பெரைரா: பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்படும் பெண்கள் குறித்துக் கவலை கொள்ள இங்கு யாருமில்லை. ஆன்லைனில் திட்டிக்கொள்ளும் மக்களைத்தான் யாராலும் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
ஆலிஃப் சுர்தி: ஏ.ஐ.பி. சர்ச்சை நாம் யாரும் 21-ம் நூற்றாண்டில் வாழவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. பல்வேறு விதமான இந்தியர்கள் இன்னும் வெவ்வேறு காலகட்டங்களில்தான் வாழ்ந்து வருகின்றனர்.
ஜேக்குலின்: இன்னமும் ஏ.ஐ.பிக்கு ஆதரவளிப்பவர்களை எண்ணி வெட்கப்படுகிறேன்.
டோனி ஸ்டார்க்: @சோனாக்ஷி சின்ஹா, கமல் ரஷித் கான் குறித்த ஆபாச ஜோக்குகள் சர்ச்சையில் பெண்களை மதித்து நடக்கச் சொன்னவர் இன்று, இதை மகிழ்ச்சியுடன் அனுபவத்திருக்கிறார்.
சல்மான் அஃபிசினாடோ: முறைகேடான விஷயங்களுக்கும், வேடிக்கையான விஷயங்களுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. மக்கள் அதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
டோனி ஸ்டார்க் @தீபிகா படுகோனே @ஆலியா, பெண்கள் முன்னேற்றத்தை பற்றிப் பேசுபவர்கள் இன்று பெண்களைக் குறித்த மலிவான ஜோக்குகளுக்குச் சிரிக்கிறார்கள்.
சனா: நம்முடைய கலாச்சாரத்தின் கருப்புப் புள்ளிகள்தான் இது மாதிரியான நிகழ்ச்சிகள்.
ஏஐபி நாக் அவுட்டுக்கு ஆதரவு:
ஹிரித்திக் ஃபேன்ஸ்: பெண்கள் முன்னேற்றத்துக்கும், ஜோக்குக்கு சிரிப்பதும் முற்றிலும் வேறு வேறானவை. எந்த மதத்தையோ, ஜாதியையோ இது காயப்படுத்தியதா? அவர்களைக் குறித்து அவர்களே கிண்டலடித்துச் சிரிப்பதைப் பார்க்கச் சொல்லி உங்களை யாரும் வற்புறுத்தவில்லை.
மெளசுமி: நகைச்சுவையை விரும்பாதவர்கள்தான் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். நாட்டில் யோசிக்க ஆயிரம் பிரச்சனை இருக்கிறது.
ஷாந்தார்: இது வெறும் நிகழ்ச்சி மட்டுமே. குழந்தைகளைப் போல செயல்படுவதை நிறுத்துங்கள்.
தீவானி தேவ்யானி: ஏ.ஐ.பி. எதிர்ப்பாளர்கள் எல்லாம் பப்ளிசிட்டியைத் தேடும் படிக்காத முட்டாள்கள்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT