Published : 19 Feb 2015 10:33 PM
Last Updated : 19 Feb 2015 10:33 PM
அடுத்த வாரம் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கும் நிலையில், `ரயில் கட்டணங்களை குறைப்பதற்கு வாய்ப்பில்லை' என்று ரயில்வே இணை அமைச்சர் மனோஜ் சின்ஹா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
ஏற்கெனவே ரயில் கட்டணங்கள் மிகவும் குறைவாகத்தான் உள்ளன. மேலும் அரசு மானியமும் தருகிறது. ஆகவே கட்டண குறைப்புக்கு வழியில்லை.
ரயில்வே துறையில் தேவைகள் அதிகமாக இருக்கின்றன. ஆனால் வளங்கள் குறைவாக இருக்கின்றன. எனவே அதனை சமன் செய்யும் விதத்தில் பட்ஜெட் அமையும். அதேசமயம் பொதுமக்களையும் நாங்கள் கருத்தில் கொள்வோம்.
தவிர, ரயில்வே காவல் படைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதற்கான மசோதா எதிர்வரும் நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.
தற்போது உள்ள சட்டத்தில் ரயில்வே காவல் படைக்கு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் அதிகாரம் இல்லை.
எனவே, அந்த அதிகாரத்தைப் பெற இந்த மசோதா அறிமுகப் படுத்தப்படும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, ரயில்வே துறையில் நூறு சதவீதம் அந்நிய நேரடி முதலீடு ஈர்க்கப்பட உள்ளது. இதன் மூலம் ரயில்வே சேவைகளை மேலும் சிறப்பாக அளிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகளை வீடியோ எடுக்க முடிவு
டெல்லியில் ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு கூறியதாவது:
பயணிகளின் பாதுகாப்புதான் எங்களின் முதன்மையான குறிக்கோள். எனவே, பிரச்சினைக்குரிய ரயில்வே தடங்கள் அனைத்திலும் அந்த வழியாகச் செல்லும் ரயில்களில் உள்ள பயணிகளை வீடியோ எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்காக, ரயில்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட உள்ளன.
அதேபோல மாவோயிஸ்ட் பிரச்சினை உள்ள பகுதிகளில் செல்லும் ரயில்களில் பயணிகளின் பாதுகாப்புக்காக ரயில்வே காவல் படையினர் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களுக்குப் பயிற்சி வழங்க புதிதாக கமாண்டோ பயிற்சி மையம் ஒன்றை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தப் பயிற்சி மையத்துக்காக நிலம் தேடப்பட்டு வருகிறது.
மேலும் குறிப்பாகப் பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய, தனியே பெண் காவலர் படை உருவாக்கப்படும். ஏற்கெனவே ரயில்வே காவல் படையில், 1,400 பெண்கள் உள்ளனர். மேலும், ஆயிரம் பேர் சேர்க்கப்பட உள்ளனர்.
அந்தப் பெண் காவலர்கள் தங்குவதற்காக 12 தங்கும் இடங்கள் கட்டுவதற்கு, ரூ.48 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தவிர, பெண் பயணிகளின் பாதுகாப்புக்காக `ஆப்' ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இது சில இடங்களில் ஏற்கெனவே பயன்பாட்டில் இருந்து வருகிறது.
இவற்றை நடைமுறைப்படுத்த, ஏற்கெனவே அமலில் உள்ள சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும். ஆனால் சட்டம் மற்றும் ஒழுங்கு போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கின்றன. எனவே, இந்த மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு மாநில அரசுகளின் ஒத்துழைப்பும் அவசியம். இதுகுறித்து அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
மேலும், மாநிலங்களில் உள்ள தடயவியல் ஆய்வகங்களை ரயில்வே உடன் இணைக்கவும் கடிதம் எழுதப்பட்டுள்ளது. அதன் மூலம், குற்றச் சம்பவங் களை விரைவில் துப்பறிய முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT