Published : 26 Apr 2014 04:46 PM
Last Updated : 26 Apr 2014 04:46 PM

‘இஸ்ரோ’ ராதாகிருஷ்ணன், லியாண்டர் பயஸ் உள்பட 56 பேருக்கு பத்ம விருதுகள்: குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வழங்கினார்

யோகா குரு பி.கே.எஸ். ஐயங்கார், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன (இஸ்ரோ) தலைவர் ராதாகிருஷ்ணன், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் உள்ளிட்ட 56 பேருக்கு பத்ம விருதுகளை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி சனிக்கிழமை வழங்கினார்.

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விழாவில், ஒரு பத்ம விபூஷண், 11 பத்ம பூஷண், 44 பத்மஸ்ரீ விருதுகளை பிரணாப் முகர்ஜி வழங்கினார் என குடியரசுத் தலைவர் மாளிகை செயலகம் தெரிவித்துள்ளது.

பத்ம விருதுகளிலேயே மிகவும் உயரிய பத்ம விபூஷண், யோகா குரு பி.கே.எஸ்.ஐயங்காருக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்தியர்களின் பழமையான உடற்பயிற்சியை நவீன உலகுக்குக் கொண்டுவந்ததன் மூலம் சர்வதேச அளவில் இவரது புகழ் பரவியது.

இஸ்ரோ தலைவர் கே.ராதா கிருஷ்ணன், டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ், இந்திய அறிவியல் கழகத்தின் இயக்குநரும் புகழ்பெற்ற விஞ்ஞானியுமான பி. பலராம், நீதிபதி தல்வீர் பண்டாரி, எழுத்தாளர் ருஸ்கின் பாண்ட், அறிவியல் தொழில்நுட்பத் துறை செயலாளர் திருமலாச்சாரி ராமசாமி ஆகியோர் பத்ம பூஷண் விருது பெற்றவர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

மேலும், நிர்வாகவியல் குரு மிருத்யுஞ்சய் பி.ஆத்ரேயா, வேளாண் விஞ்ஞானி மாதப்பா மகாதேவப்பா, டெல்லி ஐஐடி பேராசிரியரும் தேசிய மலேரியா ஆய்வு நிறுவன இயக்குநருமான வினோத் பிரகாஷ் ஷர்மா மற்றும் எழுத்தாளர் குலாம் முகமது ஷேக் ஆகியோருக்கும் பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது.

கல்வியாளர் திருபாய் பிரேம் ஷங்கர் தாக்கருக்கு மரணத்துக்குப் பிந்தைய பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஜே.எஸ். வர்மாவுக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டபோது, அதை அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

நடிகரும் அகமதாபாத் கிழக்கு தொகுதி பாஜக வேட்பாளருமான பரேஷ் ராவல், நாட்டுப்புற கலைஞர் முஸாபிர் ராம் பரத்வாஜ், பொது சுகாதார நிபுணர் இந்திரா சக்கரவர்த்தி, விண்வெளி விஞ்ஞானி எம்.சந்திரதத்தன் இந்திய மகளிர் கிரிக்கெட் குழுவின் முன்னாள் கேப்டன் அஞ்சும் சோப்ரா உள்ளிட்டோர் சனிக்கிழமை பத்ம விருது பெற்றவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.

மொத்தம் 127 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் 66 பேருக்கு கடந்த மார்ச் 31-ம் தேதி விருதுகள் வழங்கப்பட்டன. விருது அறிவிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், எழுத்தாளர் அனிதா தேசாய் மற்றும் ஓவியர் சுனில் தாஸ் ஆகியோர் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x