Last Updated : 01 Apr, 2014 03:34 PM

 

Published : 01 Apr 2014 03:34 PM
Last Updated : 01 Apr 2014 03:34 PM

சோனியாவிற்கு எதிராக வழக்கறிஞர் அஜய் அகர்வால்; ராகுலை எதிர்த்து நடிகை ஸ்மிருதி இரானி போட்டி:ரே பரேலி, அமேதி தொகுதி பாஜக வேட்பாளர்கள் அறிவிப்பு

உத்தரப் பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி போட்டியிடும் ரே பரேலி தொகுதியில் வழக்கறிஞர் அஜய் அகர்வாலும், துணைத் தலைவர் ராகுல் காந்தி போட்டியிடும் அமேதி தொகுதியில் டி.வி. நடிகை ஸ்மிருதி இரானியும் பாஜக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

ராகுலை எதிர்த்துப் போட்டி யிடும் ஸ்மிருதி இரானி (38), டி.வி. தொலைக்காட்சி நாடகங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது பாஜக சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார். இன்னும் 4 ஆண்டுகள் பதவிக்காலம் உள்ள நிலையில், அமேதி தொகுதியில் போட்டியிடவுள்ளார்.

இது குறித்து ஸ்மிருதி இரானி செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘காந்தி குடும்பம் என்ற பெயரில் அனுதாப வாக்குகளைப் பெற்று மக்களை ஏமாற்றி வருகிறார் ராகுல். இந்தமுறை நான் கடுமையான போட்டியாளராக இருந்து அவரது வெற்றியை கண்டிப்பாக பறிப்பேன்” என்றார்.

2009 மக்களவை தேர்தலில் டெல்லியின் சாந்தினி சவுக்கில் கபில்சிபலை எதிர்த்து போட்டியிட்ட ஸ்மிருதி இரானி, 76,417 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

ரே பரேலியில் சோனியாவை எதிர்த்து பாஜக சார்பில் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் அஜய் அகர்வால் போட்டியிடுகிறார். இவர், பல்வேறு விவகாரங்களில் பொது நல வழக்குகளை தொடர்ந்து பிரபலமானவர். முதலில் சமாஜ் வாதி கட்சியில் இணைந்த அஜய் அகர்வால், இப்போது பாஜகவில் சேர்ந்துள்ளார். அவருக்கு சோனி யாவை எதிர்த்துப் போட்டியிடும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக சோனியாவை எதிர்த்து மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் உமா பாரதியை நிறுத்த பாஜக திட்டமிட்டிருந்தது. ஆனால், அவர் போட்டியிடும் தொகுதியான ஜான்சியில் பிரச்சாரத்தைத் தொடங்கி விட்டதால், வேறு தொகுதிக்கு மாற முடியாது என்று தெரிவித்துவிட்டார். இதைத் தொடர்ந்து அஜய் அகர்வால் போட்டியிடவுள்ளார்.

தமிழகத்தில் இரண்டு வேட்பாளர்கள்

தமிழகத்தில் வேலூர் தொகு தியை புதிய நீதிக்கட்சிக்கு பாஜக ஒதுக்கியுள்ளது. அங்கு அக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். பாஜகவின் தாமரை சின்னத்தில் போட்டியிடும் ஏ.சி.சண்முகம், ஏற்கெனவே, எம்.பி., எம்.எல்.ஏ., பதவிகளை வகித்துள்ளார்.

தஞ்சாவூரில் பாஜகவின் தமிழக பொதுச்செயலாளர் கருப்பு என்ற எம்.முருகானந்தம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x