Last Updated : 18 Feb, 2015 08:29 AM

 

Published : 18 Feb 2015 08:29 AM
Last Updated : 18 Feb 2015 08:29 AM

அரசு இணையதளங்கள் மட்டுமே இலவசம்: சர்ச்சையில் கேஜ்ரிவால் அரசின் இணையதள வைஃபை வசதி

தேர்தல் வாக்குறுதிப்படி, அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசு அறிமுகம் செய்ய வுள்ள கம்பியில்லா இணைய தள வசதி (வைஃபை) சர்ச்சைக் குள்ளாகி இருக்கிறது. அரசு மற்றும் அதை சார்ந்த இணையதளங்கள் தவிர மற்றவைகளுக்கு கட்டணம் வசூலிக்க முடிவு செய்திருப்பதே இதற்குக் காரணம்.

டெல்லி தேர்தலின்போது ஆம் ஆத்மி கட்சி டெல்லி மாநகரம் முழுவதும் வைஃபை வசதி வழங்கப்படும் என்ற அறிவிப்பு இளைஞர்களை கவர்ந்தது.

இந்நிலையில், வைஃபை மூலம் அரசு மற்றும் அதை சார்ந்த இணையதளங்கள் மட்டும் இலவச மாக வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. பேஸ்புக், ஈமெயில், யூடியூப், வாட்ஸ்அப் உள்ளிட்ட இணையதளங்களைப் பார்க்க குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்க திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. அதுவும் இந்த வசதியை வாக்குறுதிப்படி எல்லா இடங்களிலும் வழங்கப்படாது என்றும், வெளிநாடுகளில் காணப் படுவதுபோல பொது இடங்களில் மட்டுமே வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இதனால் டெல்லி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகிகள் வட்டாரம் ‘தி இந்து’விடம் கூறும்போது, ‘வைஃபை வசதி முதல் அரை மணி நேரத்துக்கு மட்டுமே இலவசம். அதன் பிறகு அரசு மற்றும் அரசு சார்ந்த இணையதளங்கள் தவிர மற்றவற்றைப் பார்க்க ஒரு குறிப்பிட்ட கட்டணம் வசூலிக் கப்படும். கடைகள், அலுவல கங்கள், குடியிருப்புகள் மற்றும் மால் உள்ளிட்ட தனியார் இடங் களில் இந்த வசதி இருக்காது. இதற்காக ரூ.250 கோடி செலவாகும் என்பதால், அதையும் சமூக இணையதளங்களின் விளம் பரங்கள் மூலம் பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது” என்றனர்.

இந்த வசதி ஏற்கெனவே பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசால், கன்னாட் பிளேஸ், டெல்லி ரயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய இடங்களில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. அதிலும் முதல் அரை மணி நேரத்துக்குப் பிறகு குறிப்பிட்ட அளவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஆனால் இவற்றின் செயல் வேகத்திறன் குறைவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. கூகுள் தளத்தை திறக்கவே 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஆவதாகக் கூறப்படுகிறது. இதுபோல டெல்லி அரசு தரும் வைஃபை வசதியும் செயல் வேத்திறன் குறைவாக இருக்கும் என கடுமையான விமர்சனங்கள் சமூக வலையதளங்களில் உலாவரத் தொடங்கிவிட்டன.

டெல்லி அரசின் சார்பில் 18 பொது இடங்களில் வைஃபை வசதியை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, முதலில் ‘ரவுட்டர்’ எனப்படும் கருவியை இணைக்க வேண்டும். இதற்கு ஆகும் கால அளவைப் பொறுத்து இந்த வசதி செல்பாட்டுக்கு வர ஆறு மாதமாவது ஆகும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x