Published : 05 Feb 2015 12:13 PM
Last Updated : 05 Feb 2015 12:13 PM

பணத்துக்கு வாக்குகளை வாங்க பாஜக முயற்சி: ஆம் ஆத்மி குற்றச்சாட்டு

டெல்லி தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க பாஜக முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி தலைவர் அசுதோஷ், "வாக்காளர்களை பணத்தால் விலைக்கு வாங்க பாஜக முயற்சிக்கிறது. எங்களுக்கு கிடைத்த தகவலின்படி வாக்காளர்களுக்கு பாஜகவினர் அசைவ உணவு, மது பாட்டில்கள் மற்றும் பணம் வழங்கிவருகின்றனர்" என்றார்.

மேலும், "ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தது தெரிய வந்தால் மோசமான பின்விளைவுகளை சந்திக்க நேரும்" என்றும் பாஜகவினர் வாக்காளர்களை மிரட்டி வருவதாகவும் அசுதோஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பாஜக செய்தித் தொடர்பாளர் ஜி.வி.எல். நரசிம்மா, "ஆம் ஆத்மி கட்சியினர் எப்போதுமே அடுத்தவர்கள் மீதும், அரசு அமைப்புகள் மீது குற்றம் சுமத்தி பழக்கப்பட்டவர்கள். மற்றவர்கள் மீது குறை சொல்லும் இவர்களுக்கு, ஹவாலா மோசடி, கருப்புப் பணத்தை மாற்றியது போன்ற பல்வேறு புகார்கள் தங்கள் மேல் இருக்கிறது என்பது தெரியாது போலும்" என கூறினார்.

டெல்லி சட்டப்பேரவைக்கு பிப்ரவரி 7-ல் தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் நிறைவடைகிறது.

இதில், பாரதிய ஜனதாகட்சி மற்றும் ஆம் ஆத்மி கட்சி இடையே இருமுனைப் போட்டி நிலவுவதாக கருதப்படுகிறது. தொடர்ந்து 3 முறை ஆட்சியிலிருந்த காங்கிரஸ் கட்சி இந்த தேர்தலிலும் மூன்றாவது இடத்துக்கு தள்ளப் படும் நிலை காணப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x