Published : 27 Feb 2015 06:37 PM
Last Updated : 27 Feb 2015 06:37 PM
இணையம் மூலமாக வாக்களிக்கும் முறையை அறிமுகப்படுத்தும் திட்டம் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது என்று தலைமைத் தேர்தல் ஆணையர் பிரம்மா கூறியுள்ளார்.
'முதலில் தவறுகள் இல்லாத வாக்காளர் பட்டியலைக் கொண்டுவர வேண்டும்; இணையம் மூலமாக வாக்களிக்கும் முறை அதற்கு அடுத்த கட்டம் என்றவர், இதற்கு நிதியுதவி, கட்டமைப்பு மற்றும் பயிற்சி தேவை'. என்றார்.
மேலும், 'இளைய தலைமுறை வாக்காளர்கள் இணையம் வழியாக வாக்களிப்பதன் மூலமாக, நேரத்தையும், பணத்தையும், பிற வளங்களையும் சேமிக்க எண்ணுகின்றனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் போது, ஓட்டுப் போட வந்த இளம் வாக்காளர்கள் இணைய வாக்கெடுப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தனர். இரண்டு மணி நேரம் வரிசையில் நிற்க நேர்வதையும், இணையம் மூலமாக சில நொடிகளில் வாக்களித்துவிட முடியும் எனவும் கூறினர்' என்றார் பிரம்மா.
அதே நேரம், சட்ட அமைச்சரான சதானந்த கவுடா, நேற்று மக்களவையில் இணைய வாக்களிப்பு குறித்த எந்த திட்டங்களும் இல்லை என எழுத்துப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்.
மேலும் இது குறித்து பேசிய பிரம்மா, 'தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர்களை அடையாளம் கண்டு அங்கீகாரம் வழங்கும் திட்டத்தை மார்ச் 3 முதல் ஆகஸ்ட் 15 வரை அறிமுகப்படுத்த இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக ஆணையம், போலியைத் தவிர்க்க வாக்காளர்களின் புகைப்படத்தை UIDAI எண்ணுடன் இணைக்கும் பணி தொடங்கப்படவுள்ளது.
இப்போதைய புதிய வாக்காளர்கள் பட்டியலில் 10லிருந்து 12 சதவீதம் பேர் போலி வாக்காளர்கள். தற்போதைய தேர்தல் ஆணையத் தகவலின்படி 85 கோடி வாக்காளர்கள் இந்தியாவில் இருக்கின்றனர்.
தென்னிந்திய மாநிலமொன்றின் நகரில் 42 சதவீதம் போலி வாக்காளர்கள் இருக்கின்றனர். ஆதார் அடையாள அட்டை கட்டாயமில்லை என்பதால், அது இல்லாத வாக்காளர்களின் பெயர்கள் தனியாக இருமுறை சரி பார்க்கப்படும்.
வாக்காளர் பட்டியலில் உண்டாகும் குறைகளாலும், போலி வாக்காளர்களாலும் தேர்தல் ஆணையத்தின் நடுநிலைத்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனாலேயே மும்பை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. வாக்காளர் பட்டியலை முழுமையாகப் பிழையின்றி சரி செய்வதன் மூலம், ஆணையத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறோம்' என்று தெரிவித்தார்.
இத்திட்டத்திற்கு குறிப்பிட்ட எந்தவொரு கால வரையறையும் அவர் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT