Published : 17 Feb 2015 10:40 AM
Last Updated : 17 Feb 2015 10:40 AM

கேள்விக்குறியாகும் மனித உரிமை காப்பாளர்கள் பாதுகாப்பு: கருத்துக் கேட்கிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்

மனித உரிமை காப்பாளர்களுக்கு தினம் தினம் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், அவர்களுக்கான பாதுகாப்பு குறித்து விவாதிப்பதற்காக பிப்ரவரி 19-ல் டெல்லியில் சிறப்புக் கருத்தரங்கை நடத்துகிறது தேசிய மனித உரிமைகள் ஆணையம்.

பத்திரிகையாளர்கள், மனித உரிமை, தலித் உரிமை, பெண்ணுரிமை மற்றும் ஆதிவாசிகள் உரிமைகளுக்கான ஆர்வலர்கள் உள்ளிட்டவர்கள் மனித உரிமைப் காப்பாளர்கள் பட்டியலில் உள்ளனர். ஐ.நா. மன்றம் இவர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரி சர்வதேச மனித உரிமை அமைப்புகள் 1998-ல் பாரிஸில் கூடி தீர்மானம் நிறைவேற்றின. இதையடுத்து அந்த ஆண்டில் இறுதியில் மனித உரிமை காப்பாளர் பிரகடனத்தை வெளியிட்டது ஐ.நா.

மனித உரிமை காப்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், அவர்கள் கூடிப் பேசவும் சங்கங்கள் வைத்து பகிரங்கமாக செயல்படவும் எவ்வித குறுக்கீடுகளும் இருக்கக் கூடாது. மனித உரிமை காப்பாளர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் ஐ.நா. பிரகடனத்தில் உள்ளன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை மனித உரிமைக் காப்பாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே தொடர்கிறது. அதற்கு அண்மைக்கால உதாரணம்தான் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

‘‘மனித உரிமை மீறல்கள் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்துக்கு தினசரி சராசரியாக 400 மனுக்கள் அனுப்பப்படுகின்றன. இதில், 3 சதவீத மனுக்களுக்குக் கூட உரிய தீர்வு எழுதப்படுவதில்லை’’ என்று சொல்லும் மனித உரிமை காப்பாளர்கள், ‘‘தமிழகத்தை பொறுத்தவரை மூன்று நாட்களுக்கு ஒரு மனித உரிமைக் காப்பாளர் தாக்கப்படுகிறார். ஐ.நா. மன்றம் 1998-ல் பிரகடனம் வெளியிட்ட பிறகும் மவுனம் காத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம் 2009-ல்தான் இதுகுறித்த கருத்தரங்கத்தை நடத்தியது.

இந்தியாவுக்கு ‘ஏ’ கிரேடு

அதன் பிறகும் எந்த முன்னேற்றமும் இல்லாத நிலையில், 2011-ல் இந்தியா வந்த ஐ.நா-வின் மனித உரிமைக் காப்பாளர்களுக்கான சிறப்புப் பிரதிநிதி, ‘இந்தியாவில் மனித உரிமை காப்பாளர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது. இந்த விஷயத்தில் தேசிய மனித உரிமைகள் ஆணையம் சுதந்திரமாக செயல்பட வேண்டும்’ என்று அறிக்கை கொடுத்தார்.

அதன் பிறகும் தனது போக்கை மாற்றிக்கொள்ளாத தேசிய மனித உரிமைகள் ஆணையம், இப்போது இன்னொரு கருத்தரங்குக்கு அழைக்கிறது. மனித உரிமைகள் பாதுகாக்கும் விஷயத்தில் ஐ.நா-வின் ‘ஏ’ கிரேடு பட்டியலில் இருக்கிறது இந்தியா.

இலங்கை ‘பி’ கிரேடுக்கு போய்விட்டது. ‘பி’ கிரேடுக்கு போகவிருந்த மலேசியா சுதாரித்துக் கொண்டு, மனித உரிமைக் காப்பாளர்களுக்கான பாதுகாப்புச் சட்டத்தை நிறைவேற்றி ‘ஏ’ கிரேடை தக்கவைத்துக் கொண்டது.

சிறப்புச் சட்டம் தேவை

‘பி’ கிரேடுக்கு போய்விட்டால் ஐ.நா-வின் இரண்டாம் தர நாடுகள் பட்டியலுக்கு இந்தியா போய்விடும் அதை தவிர்ப்பதற்காகவே இப்போது இந்தக் கருத்தரங்கத்தை கூட்டுகி றார்கள். இதனால் மனித உரிமைக் காப்பாளர்களுக்கு எந்தப் பிரயோ ஜனமும் ஏற்படப்போவதில்லை. அவர்களை பாதுகாக்க சிறப்புப் சட்டம் கொண்டு வருவதே பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு’’ என்கிறார்கள்.

மனித உரிமை காப்பாளர்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை அரசாங்கமே செய்து கொடுக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட முக்கியமான அம்சங்கள் ஐ.நா. பிரகடனத்தில் உள்ளன. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை மனித உரிமைக் காப்பாளர்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே தொடர்கிறது. அதற்கு அண்மைக்கால உதாரணம்தான் எழுத்தாளர் பெருமாள்முருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x