Published : 21 Feb 2015 11:29 AM
Last Updated : 21 Feb 2015 11:29 AM
காங்கிரஸ் அரசின் நல்ல திட்டங்களை மத்திய அரசு நீர்த்துப் போகச் செய்துள்ளது, இந்த நிலையில் பாஜக அரசின் மசோதாக்களை காங்கிரஸ் எவ்வாறு ஆதரவு அளிக்கும் என்று அந்தக் கட்சியின் மூத்த தலைவர் அகமது படேல் கேள்வி எழுப்பியுள்ளார்.
மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. ஆனால் 245 உறுப்பினர்கள் கொண்ட மாநிலங்களவையில் பாஜக கூட்டணிக்கு 57 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே உள்ளது. எனவே வரும் பட்ஜெட் கூட்டத் தொடரின்போது முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் ஆதரவை மத்திய அரசு கோரியுள்ளது.
இன்சூரன்ஸ் அவசர சட்டம், நிலம் கையகப்படுத்துதல் அவசர சட்டம், நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு அவசர சட்டம் ஆகியவற்றுக்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதலை பெற மத்திய அரசு தீவிரமாக முயன்று வருகிறது. இதுதொடர்பாக டெல்லியில் நாளை அனைத்துக் கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் மசோதாக்களை நிறைவேற்றுவது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் மற்றும் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோரிடம் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து ட்விட்டரில் அகமது படேல் கூறுகையில்,“காங்கிரஸ் அரசின் மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு நீர்த்து போகச் செய்கிறது. இந்நிலையில் முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற காங்கிரஸின் ஆதரவை பாஜக கோருவது ஏன்? காங்கிரஸ் எவ்வாறு ஆதரவு அளிக்கும்?” என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஊரக வேலைவாய்ப்புத் திட்டம் உள்ளிட்ட காங்கிரஸ் அரசின் திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்து வருவதாக அந்தக் கட்சி குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT