Last Updated : 17 Jan, 2015 03:25 PM

 

Published : 17 Jan 2015 03:25 PM
Last Updated : 17 Jan 2015 03:25 PM

சிரியாவில் பயிற்சி பெற்று இந்தியா வர திட்டமிட்ட பொறியாளர் கைது: விசாரணையில் அதிர்ச்சித் தகவல்

சிரியாவில் ஐ.எஸ். அமைப்பிடம் பயிற்சி பெற்று இந்தியாவில் நாச வேலையில் ஈடுபட ஐதராபாத் இளைஞர் திட்டமிட்டதாக அவரிடம் போலீஸ் மேற்கொண்ட விசாரணையில், அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

ஐ.எஸ். அமைப்பில் சேர முயன்ற சல்மான் மொயீன்தீன்(32) என்ற பொறியியல் பட்டதாரி இளைஞர் துபாய் வழியாக சிரியா செல்ல முயன்றபோது வியாழக்கிழமை இரவு ஐதராபாதில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.

ஐதராபாதை சேர்ந்த சல்மான், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் பொறியியல் பட்டபடிப்பை முடித்தார். அப்போது அவருக்கு துபாயில் வாழ்ந்த இங்கிலாந்தை சேர்ந்த நிக்கி ஜோசப் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இஸ்லாத்தில் ஈடுபாடு கொண்ட நிக்கி அந்த மதத்துக்கு மாறி தனது பெயரை ஆயிஷா என்ற மாற்றிக்கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட சல்மான் மொயீன்தீன், சிரியாவுக்கு சென்று அங்கு பயிற்சி பெற்று அங்கிருந்து இந்தியா வந்து தேச விரோத செயல்களில் ஈடுபட இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், "கடந்த 2014-ம் ஆண்டு இராக் மற்றும் சிரியாவில் தங்களது இயக்கத்தை முழுவீச்சில் ஐ.எஸ். அமைப்பு செயல்படுத்த துவங்கியது முதலே சல்மான் மொயீன்தீனும் நிக்கியும் இணைந்து ஐ.எஸ். இயக்கத்தை வளர்க்க சமூக வலைத்தளங்கள் வழியாக திட்டமிட்டுள்ளனர். ஃபேஸ்புக் போன்ற சமூக இணையதளங்களில் போலி முகவரிகளோடு செயல்பட்டு அந்த இயகத்துக்கு ஆட்களை ஈர்க்க வேலை செய்துள்ளனர். பொறியியல் படிப்பைத் தொடர்ந்து அமெரிக்காவில் சல்மான் மொயீன்தீனுக்கு விசா நீட்டிப்பு செய்ய மறுக்கப்பட்ட நிலையில், அவர் இந்தியா வந்து இந்த வேலைகளை செய்து வந்துள்ளார்" என்று போலீஸார் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலங்கானா புலனாய்வு பிரிவு சல்மான் மொயீன்தீனின் சமூக இணையதள நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வந்தது. தெலங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா, பீகார் ஆகிய பகுதிகள் இளைஞர்களை கவர்ந்து ஐ.எஸ்-ல் இணைக்க முயற்சி செய்துள்ளார். சிரியாவுக்கு துபாயிலிருந்து துருக்கி வழியாக செல்ல திட்டமிட்டது தெரிய வந்த நிலையில் அவர் ஹைதராபாத் விமான நிலையத்தில் தெலங்கானா போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைதானபோது சல்மான் மொயீன்தீனிடமிருந்து பல்வேறு மின்னணு கருவிகள் கைப்பற்றப்பட்டன.

இதனிடையே சல்மான் மொயீன்தீன் மீது பொய்யான புகார்கள் தெரிவிக்கப்படுவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவர் வேலைக்காக மட்டுமே துபாய் சென்றதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x