Published : 10 Jan 2015 11:55 AM
Last Updated : 10 Jan 2015 11:55 AM
அசாம் மாநிலத்தில் போடோலாந்து தேசிய ஜனநாயக முன்னணி (என்.டி.எப்.பி) தீவிரவாதிகள் 6 பேர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் நேற்று தெரிவித் தனர்.
இதுகுறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் நேற்று மேலும் கூறியதாவது:
தீவிரவாதிகள் 6 பேரும் கோக்ரஜார் மாவட்ட வனப் பகுதியில் பாதுகாப்பு படையினரால் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர். இவர்களில் மித்திங்கா, குரேய் என்ற 2 தீவிரவாதிகள், கடந்த டிசம்பர் 23-ம் கோக்ரஜார் படுகொலையில் நேரடித் தொடர்புடையவர்கள். இதில் மித்திங்கா, கோக்ரஜார் பிரிவு தீவிரவாதிகளுக்கு துணை பொறுப்பாளர் ஆவார்.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் வேறொரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
4 கைத் துப்பாக்கிகள், 1 ஏ.கே. ரக துப்பாக்கி, 1 எம் 16 ரக துப்பாக்கி, 4 கையெறிகுண்டுகள், 300-க்கும் மேற்பட்ட ரவைகள், 4 பைகளில் மருந்துகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
இவ்வாறு அந்த போலீஸ் அதிகாரி கூறினார்.
அசாமில் கடந்த டிசம்பர் 23-ம் தேதி, கோக்ரஜார், சிராங், சோனித்பூர் ஆகிய மாவட்டங்களில் என்.டி.எப்.பி. தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 70-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் ஆவர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT