Published : 30 Jan 2015 03:03 PM
Last Updated : 30 Jan 2015 03:03 PM
நாட்டின் முதல் பிரதமரும், அரசியல் சாசனக் குழுவின் உறுப்பினருமான ஜவஹர்லால் நேரு மதசார்பற்றவர் தானா என்பது குறித்து காங்கிரஸ் கட்சி பொது விவாதத்துக்கு வர வேண்டும் என மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசியல் சாசன முகவுரையில் இருந்து மதசார்பின்மை, சோஷலிசம் ஆகிய வார்த்தைகளை நீக்குவது தொடர்பான வாத விவாதங்கள் வலுத்துவரும் நிலையில், நேரு மதச் சார்பற்றவர் தானா என்பது குறித்து காங்கிரஸ் கட்சி விவாதிக்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்.
அரசியல் சாசன முகவுரையில் இருந்து மதசார்பின்மை வார்த்தை நீக்கப்படாது என அமைச்சர் வெங்கய்ய நாயுடு நேற்றுதான் உறுதியளித்தார்.
இன்றைக்கு, ரவி சங்கர் பிரசாத் தி இந்துவுக்கு அளித்த பேட்டியில் "அரசியல் சாசனத்தை உருவாக்கிய குழுவில் அம்பேத்கர், அபுல் கலாம் ஆசாதுடன் இடம்பெற்றிருந்த நேரு ஏன் முகவுரையில் மதச்சார்பின்மை வார்த்தையை சேர்க்கவில்லை. நேரு மதசார்பற்றவர்தானா? இதனை காங்கிரஸ் கட்சியினரே விளக்க வேண்டும். எனவே, காங்கிரஸ் கட்சியினர் இது தொடர்பாக ஒரு விவாதத்துக்கு தயாராக வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "பாஜகவை பொருத்தவரை மதசார்பின்மை என்பது இந்திய சமுதாயத்தின் அடிப்படைக் கூறு. நமது கலாச்சார பாரம்பரியத்தின் பங்கு. இந்தியர்கள் அனைவரது மரபணுவிலும் மதச்சார்பின்மை நிறைந்துள்ளது. எனவே மதசார்பின்மை என்ற வார்த்தையை அரசியல் சாசன முகவுரையில் சேர்ப்பதால் மட்டுமே அதை நாம் பின்பற்றுகிறோம் என்று ஆகிவிடாது" என்றார்.
மதசார்பின்மையை பாஜக கொள்கையாக மட்டும் பார்க்கவில்லை. அதை செயல்படுத்திவருகிறது. பிரதமரின் ஜன் தன் திட்டத்தில் 11 கோடி மக்கள் பயன் பெற்றுள்ளனர். இதற்கு ஜாதி, மதம் பேதம் ஏதும் பார்க்கப்படவில்லை என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT