Published : 04 Jan 2015 10:43 AM
Last Updated : 04 Jan 2015 10:43 AM

தபால் நிலையங்களில் ஏழுமலையான் தரிசன டிக்கெட்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களின் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், நாளை முதல் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் முதற்கட்டமாக 58 தபால் நிலையங்களில் தரிசன டிக்கெட் விற்பனை தொடங்க உள்ளது.

ஏழுமலையான் கோயிலில் தினமும் சராசரியாக 65 ஆயிரம் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். ஆனால் விசேஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பதால், திருமலையில் தங்கும் விடுதிகள், தரிசன வசதி, லட்டு பிரசாதம் ஆகிய அனைத் துக்கும் பக்தர்கள் பெருமளவு அவதிப்படும் நிலை ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்துவதற்காக, ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்களை இ-தரிசன மையங்கள் மற்றும் இணையதளங்கள் மூலம் வினி யோகிக்கும் திட்டத்தை தேவஸ் தானம் ஏற்கெனவே தொடங்கியது.

இந்நிலையில், ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட், ரூ.50 சுதர்சன தரிசன டிக்கெட்களை சோதனை முறையில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் நாளை முதல் தபால் நிலையங்கள் மூலம் விற்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் பி.வி.சுதாகர் விஜயவாடாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

திருப்பதி ஏழுமலையானை பக்தர்கள் சுலபமாக தரிசிப்பதற்கு ஏதுவாக, 5-ம் தேதி முதல் ஆந்திராவில் 29, தெலங்கானாவில் 29 தபால் நிலையங்களில் ரூ.300, ரூ.50 தரிசன டிக்கெட் விற்பனையை தொடங்க உள்ளோம்.மேலும் பல்வேறு திட்டங்களையும் நடை முறைப்படுத்த உள்ளோம்.

இம்மாதம் 20-ம் தேதிக்கு பின்பு வங்கிக் கிளை, ஏடிஎம் இல்லாத ஊர்களில் உள்ள தபால் நிலையங்கள் மூலம், தபால் நிலையங்களில் கணக்கு இல்லாத வங்கி வாடிக்கையாளர்களும் ரூ.1,000 வரை பணம் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

மேலும் ஆந்திரா, தெலங்கானா ஆகிய இரு மாநிலங்களிலும் ‘பிடி அரிசி திட்டம்’ மூலம், தபால் நிலைய ஊழியர்கள் தினந்தோறும் தங்கள் வீட்டிலிருந்து ஒரு பிடி அரிசியை கொண்டுவந்து சேமிக்க உள்ளோம். இவை மாதாமாதம், அனாதை ஆசிரமங்கள், முதியோர் இல்லங்களுக்கு வழங்க திட்ட மிட்டுள்ளோம். தற்போது முதற் கட்டமாக இது போன்று சேமித்த 50 கிலோ அரிசியை விஜயவாடாவில் உள்ள முதியோர் இல்லத்துக்கு வழங்கி உள்ளோம். இவ்வாறு சுதாகர் தெரிவித்தார்.

உண்டியல் வருமானம் ரூ. 6 கோடி

திருமலை-திருப்பதி தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:

கடந்த 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கில புத்தாண்டு நாளான ஜனவரி 1-ம் தேதி வைகுண்ட ஏகாதசியும், மறுநாள் 2-ம் தேதி வைகுண்ட துவாதசியும் வந்தது. வைகுண்ட ஏகாதசியன்று ரூ.3.22 கோடியும் துவாதசியன்று ரூ.2.81 கோடியும் உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கை செலுத்தி உள்ளனர். இவ்வாறு ராவ் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x