Published : 24 Jan 2015 08:34 AM
Last Updated : 24 Jan 2015 08:34 AM
தெலங்கானாவில் தொழிலாளி ஒருவர் தனது 3 வயது மகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
தனது மனைவிக்கு பிரசவம் பார்த்த அரசு மருத்துவமனையில் லஞ்சம் கொடுக்க முடியாததால் இம்முடிவு எடுத்ததாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தெலங்கானா மாநிலம், மஹபூப் நகர் மாவட்டம், ஜெட்செர்லா பகுதியைச் சேர்ந்தவர் சென்ன கேசவுலு (35). கூலித் தொழிலாளி.
நிறைமாத கர்ப்பிணியான இவரது மனைவி நாகலட்சுமி, கடந்த திங்கள்கிழமை மஹபூப் நகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று முன்தினம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில் தரமான சிகிச்சை அளிக்க சென்னகேசவுலுவிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்டதாகவும் அவ்வாறு தரப்படாததால் அவர்கள் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் வீரண்ணபேட்டை ரயில் நிலையம் அருகே சென்னகேசவுலு தனது 3 வயது மகள் ஹர்ஷிதாவுடன் நேற்று காலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இவர்களின் சடலங்களை வீரண்ணபேட்டை ரயில்வே போலீஸார் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் சென்னகேசவுலுவின் சட்டைப் பையிலிருந்து ஒரு கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில், “அரசு மருத்துவமனையில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எதற்கெடுத்தாலும் லஞ்சம் கேட்கின்றனர். இதை அறிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளனர். இதனால் நானும் எனது மகளும் தற்கொலை செய்து கொள்கிறோம். இனியாவது ஏழைகளிடம் லஞ்சம் கேட்க வேண்டாம்” என்று எழுதப்பட்டு இருந்ததாக ரயில்வே போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT