Published : 10 Apr 2014 11:02 AM
Last Updated : 10 Apr 2014 11:02 AM

கார்கில் வெற்றிக்கு முஸ்லிம் வீரர்களே காரணம்: ஆஸம் கானிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம் - முலாயம் சிங், அஜித் சிங்குக்கும் நோட்டீஸ்

சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம்சிங் யாதவ், ராஷ்ட்ரிய லோக் தளம் கட்சித் தலைவர் அஜித் சிங், மாநில அமைச்சர் ஆஸம் கான் ஆகியோர் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் கூறிய சர்ச்சைக் கருத்துகள் பற்றி அறிக்கை தரும்படி மாநில தேர்தல் அதிகாரிகளிடம் கோரி இருக்கிறது தேர்தல் ஆணையம்.

சர்ச்சை பேச்சுகள் அடங்கிய சிடிக்களை கொடுக்கும்படி தலைமை தேர்தல் அதிகாரிக்கும் சர்ச்சைக்குரிய பேச்சுகள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பா.ஜ.க. வைச் சேர்ந்த அமித் ஷாவை ஒழித்துக் கட்டுவேன் என்று முலாயம் சிங் யாதவ் பேசியதாக வெளியான செய்தி தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. சமாஜ் வாதி கட்சியைச் சேர்ந்த ஆஸம் கானின் கார்கில் போர் தொடர்பான கருத்து பற்றியும் விவரம் கோரப்பட்டுள்ளது.

மத்திய அமைச்சர் அஜித் சிங்கும் தனது பிரசாரத்தின்போது, வகுப்புவாதத்தை தடுக்க பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியை, கடலில் தூக்கி வீசவும் தயார் என்று பேசினாராம். இதுவும் தேர்தல் ஆணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பேச்சுகள் தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கும் புகார் வந்துள்ளது.

லக்னோவில் நிருபர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசிய முலாயம் சிங் யாதவ். அமித் ஷா போன்ற தலைவர்கள் சிறையில் அடைக்கப்படாதது துரதிருஷ் டவசமானதாகும். இவரைப் போன்ற நபர்கள் பிரிவினையை ஊக்குவிக்கும் வகையில் பேசுகின்றனர் . பாஜகவை எதிர்த்துப் போராடுவோம், அமித் ஷாவை ஒழிப்பேன் என்றும் கூறியதாக சொல்லப்படுகிறது. இதனிடையே, உத்தரப்பிரதேச மாநிலம் முசாபர் நகரில் பேசும்போது விரோதத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும் அதற்கு விளக்கம் கேட்டும் தேர்தல் ஆணையம் அனுப்பிய நோட்டீஸ் மோடியின் நெருங்கிய நண்பரான அமிதுக்கு கிடைத்துள்ளது.

உத்தரப் பிரதேச அமைச்சர் ஆஸம் கானிடமும் அவரது கார்கில் கருத்துகள் பற்றி விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவரது பேச்சுகள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது.

பாகிஸ்தானுக்கு எதிராக 1999ல் நடந்த கார்கில் போரின்போது இந்தியாவின் வெற்றிக்காக போரிட்டவர்கள் முஸ்லிம் வீரர்கள்தான் என்றும், இந்துக்கள் அல்ல என்றும் சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ஆஸம் கான் பேசியதாக கூறப்படுகிறது. காஸியாபாதில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கார்கில் போரை இழுத்துள்ளார்கான்.

இது பற்றி கருத்து தெரிவித்துள்ள சமாஜ்வாதி கட்சி, ஒரு பிரிவினர் ஓரங்கட்டப்படுவதால் அதனால் ஏற்பட்ட அதிருப்தியின் வெளிப்பாடாக கான் இவ்வாறு பேசியிருக்கலாம் என கூறி இருக்கிறது.

காங்கிரஸ் கருத்து

பொறுப்புமிக்க எந்த இந்தியரும் இது போன்று பேசமாட்டார். கார்கில் போரில் உயிரிழந்த அனைவரும் இந்த நாட்டின் மைந்தர்களே. இந்தியர்களாகவே அவர்கள் போரிட்டார்கள். மதம், வகுப்பு ரீதியாக ராணுவத்தை பிளவுபடுத்த முடியாது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தான் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளரும் மத்திய அமைச்சருமான ஆனந்த் சர்மா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x