Published : 28 Jan 2015 05:47 PM
Last Updated : 28 Jan 2015 05:47 PM
நொய்டா கொலைக் குற்றவாளி சுரீந்தர் கோலியின் தூக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாகக் குறைத்து அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
டெல்லிக்கு அருகில் இருக்கும் நொய்டாவில் நடந்த தொடர் கொலைகள் தொடர்பாக குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டு சுரீந்தர் கோலிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.
முன்னதாக, இந்த உயர் நீதிமன்றம் ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு செய்திருந்த பொது நல மனு மீதான உத்தரவில் கோலியின் மரண தண்டனையை நவம்பர் 25ஆம் தேதி வரை நிறுத்தி வைக்க உத்தரவிட்டது.
நிதாரி கொலைக் குற்றவாளி சுரீந்தர் கோலியின் தூக்கு தண்டனையை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறு ஆய்வு மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்ட நிலையில், இந்த உரிமைகள் அமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகியது.
பிப்ரவரி 2009-ல் சிபிஐ நீதிமன்றம் கோலிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால், அவர் கருணை மனுவிற்காகவும், தூக்கு தண்டனையை ரத்து செய்யக்கோரி செய்திருந்த மனுவின் மீதான தீர்ப்பை எதிர்பார்த்தும் அவர் சிறையில் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதால், அவருக்கு மனித நேயவாத அடிப்படையில் கருணை காட்ட வேண்டும் என்று உரிமைகள் அமைப்பு மனு செய்தது.
டெல்லி நொய்டாவை அடுத்த நிதாரியில் 14 வயது சிறுமி ரிம்பா ஹல்தர் கொல்லப்பட்ட சம்பவம் கடந்த 2006-ம் ஆண்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தியபோது, சுரீந்தர் கோலி மற்றும் தொழிலதிபர் மொணீந்தர் சிங் பாந்தர் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வீட்டருகே தோண்டிய போது ஏராளமான சிறுமி களின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப் பட்டன. நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை சிபிஐ விசாரித்தது. குற்றவாளிகள் இருவர் மீதும் 16 வழக்குகள் தொடரப்பட்டன. இதில் ஐந்து வழக்குகளில் இருவருக்கும் சிபிஐ நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தபோது, மொணீந்தர் சிங் பாந்தர் விடுவிக் கப்பட்டார். சுரீந்தர் கோலியின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை உறுதி செய்தன.
நிராகரிக்கப்பட்ட கருணை மனு:
சுரீந்தர் கோலியின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஜூலை 27-ஆம் தேதி நிராகரித்தார். இதனையடுத்து கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி கோலிக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், உச்ச நீதிமன்றம் மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு தடை விதித்தது.
ஆனால், உச்ச நீதிமன்றம் அக்டோபர் மாதம் தூக்கு தண்டனையை ரத்து செய்வதற்கான மனுவை நிராகரித்தது. அதன் பிறகே ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் அமைப்பு அலகாபாத் உயர் நீதிமன்றத்தை பொதுநல மனு மூலம் அணுகியது.
இந்த மனுவை விசாரித்த அலஹாபாத் உயர் நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து உத்தரவிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT