Published : 24 Jan 2015 08:51 AM
Last Updated : 24 Jan 2015 08:51 AM
டெல்லியில் அதிகமாக இருக்கும் குரங்குகளால் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுக்கு இடையூறு நேரக் கூடாது என்பதற்காக, சில பகுதிகளிலிருந்து குரங்குகளை விரட்டும்படி, அமெரிக்காவின் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் இந்திய உள்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்தியாவுக்கு மூன்று நாள் சுற்றுப்பயணம் செய்யவிருக்கும் ஒபாமா டெல்லியில் தங்கும் இடங்களிலும், செல்லவிருக்கும் இடங்களிலும் குரங்குகளின் தொல்லை அதிகம். குறிப்பாக ஒபாமா தங்க இருக்கும் நட்சத்திர விடுதியான ஐடிசி மவுரியா ஷெரட்டன் அமைந்துள்ள சாலையில் நடமாடும் குரங்குகளுக்கு குறும்புகள் அதிகம். ஷெரட்டனின் 440 அறைகளும் ஒபாமா மற்றும் அவரது 600 பாதுகாப்பு அதிகாரிகளுக்காக பதிவு செய்யப்பட்டு விட்டன.
இங்கு முன்னதாக வந்திறங்கி இருக்கும் அமெரிக்க பாதுகாப்பு அமைப்பான ’எஃப்.பி.ஐ’ அதிகாரிகள் குரங்குகளை பற்றி கேள்விப்பட்டு, இப்பிரச்சினைக்கு தீர்வு காணும்படி மத்திய உள்துறை அமைச்சகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதை தொடர்ந்து மத்திய பாதுகாப்பு அதிகாரிகள் புதுடெல்லி மாநகராட்சி அதிகாரிகளுடன் நேற்று ஆலோசனை நடத்தினர்.
இது குறித்து ‘தி இந்து’விடம் மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் கூறும்போது, “தீவிரவாதிகளை விட குரங்குகளின் அச்சுறுத்தல்தான் அதிகமாக இருக்கும்போல் உள்ளது. ஒபாமா செல்லும் குறிப்பிட்ட பகுதிகளில் இருந்து குரங்குகளை அகற்ற நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாடு முழுவதிலும் இருந்து குரங்குகளை பிடிக்கும் குறைந்தது 70 பேரை உடனடியாக கொண்டு வரும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவர்களிடம் இருக்கும் லங்கூர் என அழைக்கப்படும் நீள வால் கொண்ட முகமூடி குரங்குகள் உதவியால் அவைகளை விரட்டி வெளியில் தூரமாக கொண்டு போய் விட்டு விடலாம்” என்றனர்.
எம்.பி.க்களும் புகார்
டெல்லியில் அரசு வீடுகளில் புதிதாக குடியேறி இருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குரங்குகளின் தொல்லை குறித்து புகார் அளித்துள்ளனர். இதையடுத்து மத்திய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் எம்.வெங்கய்ய நாயுடு, டெல்லி மாநகராட்சி அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.
லங்கூர் குரங்குகளிடம் சைகையில் பேசி, மற்ற குரங்குகளை விரட்டும் நபர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவர்களின் எண்ணிக்கை 20-லிருந்து 40-ஆக உயர்த்தப்படவுள்ளது.
குரங்கு சேட்டை
டெல்லியில் குரங்குகளின் தொல்லை என்பது பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கண்களில் தென்படும் பைகளை லபக்குவது, வீடு மற்றும் அலுவலகங்களில் புகுந்து கையில் கிடைத்தை எடுத்து உருட்டுவது, குழந்தைகளின் கையில் இருக்கும் திண்பண்டங்களைப் பிடுங்குவது, பிராண்டுவது, கடித்து விடுவது என பல வகைளில் தொல்லைகளைத் தருகின்றன.
அரசு அலுவலகங்களில் புகுந்து, அங்குள்ள முக்கிய ஆவணங்களைக் காற்றில் பறக்க விட்ட சம்பவங்களும் நடந்துள்ளன. நாடாளுமன்றம், குடியரசுத் தலைவர் மாளிகை உள்ளிட்ட பகுதிகள் குரங்குகளின் ஆதிக்கத்தில் உள்ள முக்கியப் பகுதிகள். கடந்த ஐந்து வருடங்களில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குரங்குகளால் கடிபட்டுள்ளனர். பூங்காவில் ஒரே நாளில் முப்பதுக்கும் மேற்பட்டவர்களை குரங்கு கடித்த சம்பவங்களும் உண்டு. குரங்குகளால் ஏற்பட்ட விபத்துக்களால், டெல்லியின் துணை மேயர் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT