Last Updated : 18 Jan, 2015 02:15 PM

 

Published : 18 Jan 2015 02:15 PM
Last Updated : 18 Jan 2015 02:15 PM

உ.பி.யில் திருமண உதவி திட்டத்தில் மோசடி: ‘மணமகள்’ என பாட்டிகளும் நிதி பெற்றது கண்டுபிடிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தில் அரசிடமிருந்து பெண் பயனாளிகள் திருமண உதவித் தொகை பெற்றதில் மோசடி நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பாட்டிகள் கூட மணமகள் என போலிச் சான்றிதழ் கொடுத்து உதவித் தொகை பெற்றது கண்டுபிடிக்கப்பட்டு, இதன் மீது விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

உ.பி.யில் சமூக நலத்துறை சார்பில் சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமண உதவித்தொகையாக ரூ. 10 ஆயிரம் அளிக்கப்படுகிறது. இது முறையாக போய்ச்சேர வேண்டியவர் களுக்கு அல்லாமல், ஏற்கெனவே மணமான பெண்கள், பேரன் பேத்தி எடுத்த பாட்டிகள் என பலரும் கடந்த 3 ஆண்டுகளில் ஏமாற்றி நிதியுதவி பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது.

இதில் பரேலி, பதாயூ, ஷாஜஹான்பூர், பிலிபித் ஆகிய 4 மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அதிகம் பெற்றிருப்பதால் அந்த மணமகள்களை தேடும் பணியை மாவட்ட ஆட்சியர்கள் முடுக்கி விட்டுள்ளனர்.

இது குறித்து ‘தி இந்து’விடம் அம் மாவட்டங்களை உள்ளடக்கிய டிவிஷனல் ஆணயர் விபின்குமார் துவேதி கூறும்போது, “இதை ஏமாற்றி பெறுவதற்காக ஒரு மோசடிக் கும்பல் களம் இறங்கியதாக தெரிய வந்துள்ளது. அவர்கள் மூலமாக பலனை பெற்ற போலி மணமகள்கள் கிடைத்தால் அந்த கும்பலில் உள்ள அனைவரையும் பிடித்து விடலாம் என்பதால் அவர்களை தேடிப் பிடிக்க உத்தரவிட்டுள்ளேன். இதில் தொடர்புடைய அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

பரேலி மாவட்டத்தின் மீர்குன்ச் தாலுக்காவில் விதவைகளுக்காக அரசு தரும் உதவித்தொகையை, போலி சான்றிதழ்கள் காட்டிப் பெற்றது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சிறுபான்மை யினருக்கான மணமகள் உதவித் தொகை திட்டத்திலும் முறைகேடு நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x