Published : 12 Jan 2015 08:45 AM
Last Updated : 12 Jan 2015 08:45 AM
மோதல்கள் மிகுந்த இடங்களில் தொடர்ந்து பணியாற்றி வருவதாலும், அதிக வேலைப்பளுவாலும் மத்திய ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்த வீரர்கள் சமூகத்தில் தனித்து விடப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
சுமார் 3 லட்சம் வீரர்கள் உள்ள இந்தப் படைப் பிரிவில் சமீபத்தில் வீரர்களின் வாழ்நிலை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் இந்தப் படைப் பிரிவில் பணியாற்றும் ஆண்கள் மற்றும் பெண்களின் பரிதாபகர மான வாழ்க்கைச் சூழல்கள் தெரியவந்துள்ளன. அந்த ஆய்வு முடிவுகள் அறிக்கையாகத் தயார் செய்யப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
சுமார் 80 முதல் 89 சதவீதம் வீரர்கள் எந்தச் சமயத்தில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த் தப்படலாம் என்ற நிலையில் உள்ளனர். சுமார் 80 முதல் 85 சதவீதம் வீரர்கள் மோதல்கள் அதிகம் உள்ள இடங்களில் நிரந்தரமாகப் பணியமர்த்தப்பட்டுள்ளனர். அவர்களில் மாவோயிஸ்ட் பிரச்னை உள்ள 10 மாநிலங்கள் (37 சதவீதம்), தீவிரவாதப் பிரச்னை உள்ள ஜம்மு காஷ்மீர் (28 சதவீதம்) மற்றும் பிரிவினைவாதப் பிரச்னை உள்ள வட கிழக்கு மாநிலங்கள் (16 சதவீதம்) ஆகியவற்றில் பணிபுரிகிறார்கள்.
கடினமான பணிச்சூழல் காரண மாக பெரும்பாலான வீரர்கள் தங்கள் குடும்பங்களில் நடை பெறும் திருமணங்கள், இறப்புகள் மற்றும் இதர விசேஷங்களில் பங்கு கொள்ள முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக அவர்கள் தங்கள் குடும்பம் மற்றும் சமூகம் ஆகியவற்றால் தனித்து விடப்படுவதோடு, அவர்களுக்குத் திருமணம் நடைபெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
வீரர்கள் பணியாற்றும் இடங் களில் தங்களின் குடும்பத்தினரை அழைத்து வர அனுமதி இல்லாத காரணத்தால் குடும்பத்தைப் பிரிந்து பணிபுரிய வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இதனால் குழந்தைகளுக்குப் பெற்றோர் களின் முழுமையான அன்பு கிடைப்பதில்லை.
மேலும், இவர்களின் குழந்தை களுக்கும் சரியான திருமண வரன்கள் கிடைக்காமல் போகின்றன. சி.ஆர்.பி.எப். வீரர்களின் பணி இயல்பைப் புரிந்துகொண்ட சிலர் மட்டுமே வரன் தர முன் வருகிறார்கள். ஆனால் அவர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே இருக்கின்றது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக, குழந்தைகளின் கல்வி மிகவும் பாதிக்கப்படுகிறது. வீரர் களின் குழந்தைகளின் கல்வி நிலை குறித்து ஆராயும்போது வெறும் 42 சதவீதத்தினரின் குழந்தைகள் மட்டுமே பத்தாம் வகுப்பை முடிப்பதாகத் தெரிய வந்துள்ளது.
வெறும் 11.33 சதவீதத்தினரின் குழந்தைகள் மட்டுமே கல்லூரிக் குச் செல்கிறார்கள். இவர்களில் 3.54 சதவீதத்தினர் குழந்தைகள் மட்டுமே பட்ட மேற்படிப்பு போன்ற உயர் கல்வியைத் தொடர்கிறார்கள்.
இது தவிர, குடும்பத்தை விட்டு நீண்ட காலத்துக்குப் பிரிந்திருப் பதால், வீரர்களின் உடலியல், உளவியல் மற்றும் நடத்தை ஆகியவற்றில் பெரும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனால் குடும்பம் மற்றும் திருமண உறவுகளில் விரிசல் ஏற்படுகின்றது.
ஓர் ஆண்டில் இரண்டு மாதங்கள் மட்டுமே வீரர்களுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. ஆனால் ஏதேனும் அவசரப் பணி காரணமாக, அந்த விடுமுறையையும் அவர்களால் முழுமையாகக் கழிக்க முடிவதில்லை.
இதுகுறித்து ஆராயம்போது, சென்ற ஆண்டில் ஒரு வீரர், வெறும் 45 நாட்கள் மட்டும்தான் தங்கள் குடும்பத்தினருடன் இணைந்திருந்தார்கள் என்று தெரிய வந்துள்ளது.
இந்த வீரர்களில் பலர் வெயில் மிகுந்த சமதளப் பகுதிகளில் இருந்து திடீரென பனி மிகுந்த மலைப் பகுதிகளுக்கு பணி நிமித்தமாக மாற்றப்படுவார்கள். அதன் காரணமாக, பெரும்பாலான வீரர்கள் பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஆளாகிறார்கள் என்றும் தெரியவந்துள்ளது.
அவ்வப்போது பணி மாற்றம் காரணமாகப் பல்வேறு இடங்களுக்குச் செல்ல வேண்டி இருப்பதால் குறைந்த அளவே துணிகளை எடுத்துச் செல்ல நேரிடுகிறது. இதுவும் வீரர்களுக்கு ஒரு வகையான உடல் அசெளகரியத்தை ஏற்படுத்துகிறது.
இதுபோன்ற காரணங்களால் இந்தப் படைப் பிரிவில் இருந்து நிறைய வீரர்கள் விலகுகிறார்கள். கடந்த எட்டு ஆண்டுகளில் மட்டும் 30,297 பேர் இதிலிருந்து விலகி இருக்கிறார்கள். எனில், ஓர் ஆண்டுக்கு 3,787 பேர் என்ற கணக்கில் வீரர்கள் விலகி வருகிறார்கள் என்பது தெரியவந்துள்ளது.
இத்தகைய பிரச்னைகளைக் களைவதற்கு சி.ஆர்.பி.எப். தலைமை மேற்கொண்டு வரும் முயற்சிகள் மற்றும் நடவடிக்கைகளையும் இந்த ஆய்வு கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT