Last Updated : 20 Jan, 2015 10:45 AM

 

Published : 20 Jan 2015 10:45 AM
Last Updated : 20 Jan 2015 10:45 AM

அதிபர் ஒபாமாவின் பீஸ்ட் கார் ஒரு நடமாடும் கோட்டை

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் 'பீஸ்ட்' கார், ஒரு நடமாடும் கோட்டை என்று சொன்னால் அது மிகையாகாது. காரணம், எதிரிகளின் குண்டுகளில் இருந்து காப்பாற்றும் வடிவமைப்பு, எதிர்த்தாக்குதல் நடத்தத் தேவையான ஆயுதங்கள், விபத்துகளில் இருந்து காப்பாற்றும் தொழில்நுட்பங்கள், எந்த இடத்தில் இருந்தாலும் வெள்ளை மாளிகையுடன் தொடர்பில் வைத்திருக்கும் சாதனங்கள் என ஓர் அரசனின் கோட்டையைப் போன்று சகல வசதிகளையும் கொண்டது அதிபரின் 'பீஸ்ட்' கார்.

குடியரசு தின விழாவில் கலந்துகொள்ள வரும் அதிபர் ஒபாமாவுடன் இந்த காரும் வருகிறது. அனேகமாக, இதற்கு முன்பு இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க அதிர்பகளைப் போல ஒபாமாவும் தன்னுடைய 'பீஸ்ட்' காரிலேயே பயணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் அவர் தற்சமயம் இந்திய சட்டத்துக்குட்பட்டு நடப்ப தாகத் தகவல் வெளியாகியுள்ளது. எனவே, குடியரசு தின விழா நடக்கும் இடத்துக்கு தன்னுடைய காரில் செல்லாமல், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் 'லிமோசின்' ரக காரிலேயே செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகி யுள்ளது.

அவ்வாறு அதிபர் ஒபாமா பயணிக்கும் பட்சத்தில், இந்தியாவில் தன்னுடைய 'பீஸ்ட்' காரைப் பயன்படுத்தாத முதல் அமெரிக்க அதிபர் என்ற பெருமையை அவர் அடைவார்.

18 அடி நீளமும் 8 டன் எடையும் கொண்ட இந்த 'பீஸ்ட்' கார் எந்த வகையான தோட்டா மற்றும் வெடிகுண்டுகளையும் தாங்கும் வல்லமை படைத்ததாகும். இத னுடைய சக்கரங்கள் பஞ்சர் ஆகாத தன்மை கொண்டவையாகும்.

டீசல் டேங்க் வெடித்துச் சிதறாமல் இருக்க, தனித்துவமான நுரை உடைய தீயணைப்பு கருவி, இரவிலும் தெளிவாகக் காட்டக்கூடிய கேமரா போன்ற கருவிகளை உடைய இந்த காரை ஆபத்துக் காலத்தில் மிக வேகமாகவும், 180 டிகிரி சுழற்சி செய்து தப்பிக்கவும் பயிற்சி பெற்ற ரகசிய பாதுகாப்புப் படை ஓட்டுநர் இயக்குவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாறு காணாத பாதுகாப்பு

தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதால், அதிபர் ஒபாமாவுக்கு ஏழு அடுக்கு பாதுகாப்பு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, டெல்லி முழுக்க கண் காணிப்பதற்காக, கண்காணிப்பு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அதற்கு ஏதுவாக, சுமார் 15 ஆயிரம் ரகசிய கேமராக்கள் விழா நடக்கும் இடம், அதிபர் தங்கும் விடுதி எனப் பல இடங்களிலும் பொருத்தப்பட்டுள்ளது.

மேலும், அதிபர் செல்லவிருக் கும் சாலைகளில் அமெரிக்க ரகசிய பாதுகாப்புப்படை ஏற்கெனவே சோதனையிட்டு விட்டது.இந்த விழாவில் பாதுகாப்புப் பணிகளுக்காக 80 ஆயிரம் டெல்லி போலீஸாரும், 20 ஆயிரம் துணை ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வான்வழியாக ஏதேனும் தாக்குதல் நடத்தப்பட்டால் அதைச் சமாளிக்க, குடியரசு தின விழா அணிவகுப்பு நடைபெறும் இடத்துக்கு மேலே இந்திய விமானப் படை கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளது.

மேலும், விழாவைக் காண வரும் மிக முக்கியமான சிறப்பு விருந்தினர்கள் அமர்ந்திருக்கும் பகுதியில் குண்டு துளைக்காத மேடை அமைக்கப்படுகிறது. தவிர, விழா நடக்கும் பகுதியைச் சுற்றிச் செல்லும் ரஃபி மார்க், ஜன்பத் மற்றும் மன் சிங் ரோடு ஆகிய சாலைகள் அனைத்தும் விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே மூடப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x