Last Updated : 21 Jan, 2015 09:36 AM

 

Published : 21 Jan 2015 09:36 AM
Last Updated : 21 Jan 2015 09:36 AM

சொத்துக்குவிப்பு வழக்கு மேல்முறையீடு: ஜெ. சிறையில் இருந்தபோது சோதனை நடத்தியது ஏன்? - நீதிபதி சி.ஆர். குமாரசாமி கேள்வி

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டை தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியது ஏன்? எந்த உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது என கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி கேள்வி எழுப்பினார்.

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. ஜெயலலிதா தரப்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலும், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞருமான எல்.நாகேஸ்வர ராவ், மூத்த வழக்கறிஞர் பி.குமார், நவநீத கிருஷ்ணன் உள்ளிட்ட பல‌ர் ஆஜராகின‌ர்.

ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் எல்.நாகேஸ்வர ராவ் ஐந்தாவது நாளாக தனது இறுதிவாதத்தை தொடர்ந்தார்.அப்போது அவர் வாதிட்டதாவது:

சட்டப்படி குற்றம் சாட்டப்பட்டவர் முன்னிலையில் தான் அவரது வீட்டில் சோதனை நடத்த வேண்டும்.ஆனால் இவ்வழக்கில் ஜெயலலிதாவை கைது செய்து சிறையில் அடைத்த பிறகு, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் அவரது போயஸ் கார்டன் வீட்டில் சோதனை நடத்தியுள்ளன‌ர். எனவே, இந்த சோதனை முடிவுகளை நீதிமன்றம் கருத்தில் கொள்வதில் சிக்கல் இருக்கிறது''என்றார்.

பவானிசிங் திணறல்

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, “ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருந்த போது அவரது வீட்டில் சோதனை நடத்தியது ஏன்? எதற்காக அவ்வாறு சோதனை நடத்தப்பட்டது? எந்த உத்தரவின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டது?'' என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் அரசு வழக்கறிஞர் பவானி சிங் திணறினார். எனவே, திமுக தரப்பு வழக்கறிஞர் சரவணன், “ஜெயலலிதாவின் வீட்டில் சோதனை நடத்துவது தொடர்பாக அவருக்கு தமிழக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தகவல் தெரிவித்தனர். அப்போது அவர், தனது உதவியாளர் பாஸ்கர் முன்னிலையில் சோதனை நடத்துமாறு அனுமதி கடிதம் அளித்திருந்தார்.ஜெயலலிதாவின் ஒப்புதல் கடிதத்தின் அடிப்படை யிலேயே அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது'' என்றார்.

அதற்கு நீதிபதி குமாரசாமி, “போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருப்பவர் அளிக்கும் ஒப்புதல் கடிதத்தை ஏற்பதில் நிறைய சிக்கல் இருப்பதாக உச்ச நீதிமன்றம் பல தீர்ப்புகளில் குறிப்பிட்டுள்ளது''என்றார்.

26.9 கிலோ தங்க நகைகளுக்கு வரி

நாகேஸ்வர ராவ் வாதிட்டதாவது:

1964-ம் ஆண்டு முதல் ஜெயலலிதா ஏராளமான திரைப் படங்களில் நடித்து பிரபல மான நடிகையாக வலம் வந்துள் ளார்.1984-89 காலகட்டத்தில் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.1986-1990 இந்த காலகட்டத்தில் ஜெயலலிதா 26,902 கிராம் தங்க நகைகள் வைத்தி ருந்தார். இதில் ஜெயலலிதாவுக்கு வந்த அன்பளிப்பு தங்க நகைகளும் (3,365 கிராம்) அடங்கும். இதே காலகட்டத்தில் சசிகலா 1,902 கிராம் தங்க நகைகள் வைத்திருந்தார்.

ஜெயலலிதாவும்,சசிகலாவும் தங்களது வருமானத்துக்குட்பட்ட முறையில்,சட்ட விதிமுறைகளை மீறாமல் இந்த நகைகளை வாங்கி யுள்ளனர். எனவே அவற்றுக்கு அந்தந்த ஆண்டுகளில் முறையாக வருமான வரியும், சொத்து வரியும் செலுத்தியுள்ளன‌ர்.

த‌மிழக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் தங்க நகைகள், பொருட்கள், அதில் பதிக்கப்பட் டிருந்த கற்கள் என தனித்தனியாக மதிப்பிடவில்லை. இதே போல வைர நகைகளையும் துல்லியமாக மதிப்பிடவில்லை. தங்கம், வைரம் என மொத்தமாக எடைபோட்டு, மதிப்பீடு செய்துள்ளனர். அதன் மதிப்பு ரூ.10.4 கோடி என தெரிவித்துள்ளனர்.இதனை அரசு தரப்பு சாட்சிகளே உறுதி செய்ய வில்லை.

உண்மையில் ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகளின் மதிப்பு ரூ.1.6 கோடி மட்டுமே. இதனை சொத்துவரி தீர்ப்பாயமும் வருமான வரித்துறையும் ஏற்றுக்கொண்டு 1992-ம் ஆண்டே சான்றிதழ் அளித்துள்ளன. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்வதற்கு முன்பாகவே, இந்த சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவின் தங்க, வைர நகைகளுக்காக செலுத்தப்பட்ட சொத்துவரி, வருமான வரி ஆவணங்களை சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு அளித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்கவில்லை.ஆனால் உச்சநீதிமன்றம் வருமான வரித்துறை அளித்த சான்றிதழை வழக்கில் ஆதாரமாக கருதலாம் என பல வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளது. எனவே வருமான வரித்துறையின் ஆவணங்களை கர்நாடக உயர் நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும்''என்றார். இதையடுத்து நீதிபதி சி.ஆர்.குமாரசாமி,வழக்கின் விசாரணையை புதன்கிழமைக்கு (இன்று) ஒத்திவைத்தார்.

டெல்லிக்கு போய்விட்டார்களா?

சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின் போது அரசு வழக்கறிஞர் பவானிசிங், இவ்வழக்கில் திமுக பொதுச்செயலாளர் அன்பழகனை 3-ம் தரப்பாக சேர்த்துக்கொள்ளுமாறு கோரிய மனு மீது முடிவை அறிவிக்குமாறு கேட்டார். அப்போது திமுக வழக்கறிஞர்கள் யாரும் நீதிமன்றத்தில் இல்லை.எனவே நீதிபதி சி.ஆர்.குமாரசாமி,

“திமுக தரப்பு வழக்கறிஞர்கள் எங்கே? அதற்குள் டெல்லிக்கு போய்விட்டார்களா?” என கேட்டார். அதற்கு பவானிசிங்,

“அவர்கள் எங்கே போகிறார்கள் என்றே தெரியவில்லை.வழக்கை தொந்தரவு செய்ய மட்டுமே வருவார்கள்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x