Last Updated : 02 Jan, 2015 10:48 AM

 

Published : 02 Jan 2015 10:48 AM
Last Updated : 02 Jan 2015 10:48 AM

திருமணம் ஆனவுடன் தப்பி ஓட முயற்சித்த மணப்பெண் போலீஸில் ஒப்படைப்பு: உ.பி.யில் மோசடி கும்பல் பிடிபட்டது

உபியின் மேற்குப் பகுதியைச் சேர்ந்த மாப்பிள்ளைக்கு பல வருடங்களுக்கு பின் கிடைத்த மணப்பெண், மணமான மறுநிமிடமே அவரை விட்டு ஓட முயற்சித்துள்ளார். பொதுமக்கள் அவரை விரட்டிப் பிடித்து போலீஸில் ஒப்படைத்துள்ளனர்.

டெல்லிக்கு மிக அருகில் உள்ள பரேலியில் சி.பி.கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரபால் (32). இவர் கடந்த ஐந்து ஆண்டுகளாக மணப்பெண்ணை தேடி வந்தார். இந்நிலையில், அவருக்கு அறிமுகமான கல்யாண தரகர் ஹோசியார் சிங், ரூ.35,000 கட்டணம் கொடுத்தால் மணம் முடித்து வைப்பதாகக் கூறியுள்ளார்.

அதன்படி அருகிலுள்ள காத்திமா கிராம கோயிலில் மிக எளிய முறையில் திருமணம் நடந்தது. பின்னர் வீடு திரும்புவதற்காக மணப்பெண்ணுடன் பரேலி ரயில் நிலையம் செனறுள்ளனர்.

அங்கு ஹோசியர் சிங் தரகு பணத்தைப் பெற்றுக் கொண்டவுடன் மணப்பெண்ணும் அவருடன் சேர்ந்து தப்பி ஒட முயன்றிருக்கிறார். இதனால் ரயில் நிலையத்தில் ஏற்பட்ட அமளியால் பொதுமக்கள் மணப்பெண்ணை பிடித்து விசாரித்துள்ளனர். அப்போது, அந்தப் பெண் ஏற்கெனவே மணமானவர் என்பதும் கல்யாண தரகர் நடத்தி வந்த மோசடிக் கும்பலை சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து அந்தப் பெண்ணை போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து `தி இந்து’விடம் பரேலி நகர காவல் துறை கண்காணிப்பாளர் ராஜீவ் மல்ஹோத்ரா கூறும்போது, “தப்பி ஓடிய தரகர் ஹோசியர் சிங் மற்றும் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறோம். இவர்கள் இந்தப் பகுதியில் மணமாகாத பல மாப்பிள்ளைகளுக்கு மணமான இந்தப் பெண்ணை மணம் முடித்து பணம் வசூல் செய்து வந்துள்ளனர்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x