Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM
மக்களவைக்கு முதல் கட்டமாக தேர்தல் நடைபெறும் ஏப்ரல் 7-ம் தேதி பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிடுகிறது. இந்த தகவலை அக்கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கட்சியின் மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி தலைமையிலான குழுவிடம் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணி ஒப்படைக்கப்பட்டது. இவரை உ.பி.யின் வாரணாசியில் இருந்து கான்பூர் தொகுதிக்கு மாற்றியதால் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணிகள் தடைபட்டிருப்பதாகவும், மேலும் அறிக்கையில் நரேந்திர மோடி மாறுதல் செய்ததாகவும் சர்ச்சைகள் எழுந்தது.
இதை மறுத்த நிர்மலா சீதாராமன், ‘தவறாக தகவல் ஊடகங்களில் வெளியாகி உள்ளது. தேர்தல் அறிக்கையை வெளியிட மூத்த தலைவர்களின் தேதி கிடைக்காததால் தாமதமாகிறது’ என்று கூறினார்.
மே 12 வரை ஒன்பது கட்டமாக மக்களவைத் தேர்தல் நடைபெறயிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 49 பக்க தேர்தல் அறிக்கையை மார்ச் 26-ல் வெளியிட்டது. முலாயம்சிங்கின் சமாஜ்வாதி, மார்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் என அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டு விட்டன.
தாமதம் குறித்து ‘தி இந்து’விடம் பாஜக வட்டாரம் கூறுகையில், ‘தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதுதான் தாமதத்திற்கு முக்கியக் காரணம். தங்கள் பிரச்சாரத்திற்காக அவர்கள் சம்மந்தப்பட்ட தொகுதிகளில் பணியில் இருப்பதால், அறிக்கை தயாரிப்பிற்கு நேரம் ஒதுக்க முடியாமல் போனது என்று தெரிவித்தனர்.
ஒரு புத்தகம் போல் 60 பக்கங்களில் தயாரிக்கப்பட்ட தேர்தல் அறிக்கையின் வாசகங்கள் படிக்க கடினமாக இருந்ததாகவும், இதை மாற்றி சாதாரண மக்களும் படித்து புரிந்துகொள்ளும் வகையில் மிகவும் எளிமையாகவும், 20 பக்கங்கள் கொண்டதாகவும் மாற்றி எழுதும்படி மோடி கூறி விட்டதாகவும் அந்த வட்டாரம் தெரிவிக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் செய்தி தொடர்பாளரான பிரியங்கா சதுர்வேதி தனது இணையதளத்தில் குறிப்பிடுகையில், ‘மேலாண்மை மற்றும் நிர்வாகத்தில் சிறந்தவர்கள் எனக் கூறிக் கொள்ளும் கட்சியும், அதன் தலைவர்களும் தங்கள் தேர்தல் அறிக்கையை குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியாமல் போனது.
தேர்தல் அறிக்கையை கூட பாஜகவால் ஏன் குறிப்பிட்ட நேரத்தில் வெளியிட முடியவில்லை?’ எனக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணியை சேர்ந்த பெரும்பாலான தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதுதான் தாமதத்திற்கு முக்கியக் காரணம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT