Published : 28 Jan 2015 10:58 AM
Last Updated : 28 Jan 2015 10:58 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை காங்கிரஸ் பெரிதும் நம்பியிருப்பதாக கூறப் படுகிறது. இங்கு முஸ்லிம்கள் 10 சதவீதத் துக்கும் அதிகம் வசிக்கும் 32 தொகுதிகளில் காங்கிரஸ் தனது பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி யுள்ளது.
ஷீலா தீட்சித் தலைமையில் டெல்லியில் தொடர்ந்து 3 முறை ஆட்சிசெய்த காங்கிரஸ், கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது. கடந்த முறை டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி, 8 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. இந்த 8 தொகுதிகளின் வெற்றிக்கும் அவற்றில் 10 முதல் 50 சதவீதம் வரை வசிக்கும் முஸ்லிம்களே காரணம் என்று கூறப்படுகிறது. மற்ற தொகுதிகளில் உள்ள முஸ்லிம்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்ததாக கருதப்படுகிறது.
இதையடுத்து நடைபெற்ற மக்களவை தேர்தலிலும் பெரும் பாலான முஸ்லிம் வாக்குகள் ஆம் ஆத்மிக்கே விழுந்தமையால் அக்கட்சிக்கு இரண்டாமிடம் கிடைத் தது. இதனால், டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும் காங் கிரஸ் படுதோல்வி அடைந்தது. எனவே இந்த தேர்தலில் பாஜக ஆம் ஆத்மி கட்சி இடையே நேரடிப் போட்டி நிலவுவதாகக் கருதப்படுகிறது.
இந்த நிலையில் டெல்லியில் 32 தொகுதிகளில் முஸ்லிம் வாக்குகளை காங்கிரஸ் பெரிதும் நம்பியிருக்கிறது. முஸ்லிம்களின் வாக்குகள் தமக்கே கிடைக்கும் வகையில் அவர்களிடையே தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும்படி தனது கட்சியினரிடம் காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
இது குறித்து டெல்லி காங் கிரஸின் முக்கிய தலைவரான அர்விந்த்சிங் லவ்லி ‘தி இந்து’விடம் கூறும்போது, “மக்களவை தேர்தலில் வாரணாசியில் மோடியை எதிர்த்துப் போட்டியிடு வதில் காங்கிரஸ் சுணக்கம் காட்டியது. ஆனால் மோடியை எதிர்த்து தானே போட்டியிடுவது என கேஜ்ரிவால் முடிவு செய்ததால் அவரை முஸ்லிம்கள் இடையே பிரபலப்படுத்தியது. இது, அவர் தான் முஸ்லிம்களின் உண்மையான காவலர் என்ற தவறாக எண்ணத்தை உருவாக்கி விட்டது” என்றார். டெல்லியில் முஸ்லிம்களிடையே பிரச்சாரம் செய்யும் காங்கிரஸ், பாஜகவை விட கேஜ்ரிவாலை எதிர்த்தே பிரச்சாரம் செய்கிறது. பாஜகவின் உட்பிரிவாக ஆம் ஆத்மி செயல்படுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கு உதாரணமாக, கிரண்பேடி, ஷாஜியா இல்மி, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் வினோத்குமார் பின்னி, எம்.எஸ்.தீர் ஆகியோர் பாஜகவில் இணைந்ததை அக்கட்சி எடுத்துக் கூறுகிறது.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில் முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் 10 தொகுதிகளில் ஆம் ஆத்மிக்கு வெற்றி கிடைத்தது. மற்ற 13 தொகுதிகளில் அக்கட்சிக்கு இரண்டாமிடம் கிடைத்தது. 48 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் மத்தியா மஹாலில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்றது. இங்கு வெற்றிபெற்ற சோஹிப் இக்பால், இந்தமுறை காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT