Last Updated : 13 Jan, 2015 10:37 AM

 

Published : 13 Jan 2015 10:37 AM
Last Updated : 13 Jan 2015 10:37 AM

உச்ச நீதிமன்ற தடையை மீறி எருமை, புல்புல் சண்டை நடத்த அசாமில் ஏற்பாடுகள் தயார்

உச்ச நீதிமன்ற தடையை மீறி எருமை மற்றும் புல்புல் பறவைகள் சண்டைக்கு அசாம் மாநிலவாசிகள் தயாராகி வருகின்றனர். இவை இரண்டும் தமிழகத்தின் ஜல்லிக்கட்டை போல் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

வட கிழக்குப் பகுதியில் உள்ள அசாம் மாநிலத்தில் விவசாய திருவிழாவாகக் கொண்டாடப்படும் நிகழ்ச்சி ‘போகாலி பிகு’ அல்லது ‘மக் பிகு’. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படும் அதே நாட்களில் கொண்டாடப்படும் இந்த பிகு, அனைத்து மதத்தினர் மத்தியிலும் பிரபலமாக விளங்குகிறது.

அசாமிய காலண்டரில் ‘மக்’ என அழைக்கப்படும் முதல் மாதத்தின் முதல் நாளில் கொண்டாடப்படும் பிகு திரு விழாவுக்கு அரசு விடுமுறையும் உண்டு. நவ்காவ்ன், மாரிகாவ்ன், சிவசாகர் ஆகிய மாவட்ட கிராமங்களில் நடைபெறும் இவ்விழா வரும் 15-ல் தொடங்குகிறது.

இவ்விழாவின் ஒரு பகுதியாக இரண்டு எருமைகளை மூர்க்கத்தனமாக மோதவிட்டு வேடிக்கை பார்த்து மகிழ்வார்கள். இவற்றில் ஒரு ஜோடிக்கு பின் மறுஜோடி எனக் களமிறக் கப்படும் எருமைகளில், அதிக நேரம் நின்று சண்டையிடும் எருமைக்கு பரி சளிக்கப்படுகிறது. இந்த மோதலில் எருமைகள் படுகாயம் அடைவதுடன் சில நேரங்களில் உயிரிழப்பதும் உண்டு.

அசாமில் அதிகமாகக் காணப்படும் புல்புல் பறவைகளையும் சண்டைபோட வைத்து மகிழ்கிறார்கள். கொண்டலாத்தி மற்றும் இராப்பாடி குருவியின் வகையைச் சேர்ந்ததாகக் கருதப்படும், சற்று நீண்ட அலகுகளுடன் காட்சியளிக்கும் புல்புல் பறவைகளால் அதிக தூரம் பறக்க முடியாது. இவை வயல்களில் விளையும் பழங்களை கொத்தி உண்ண வேண்டி அங்கு சுற்றி வருவது உண்டு. எனவே, ஆங்காங்கே கூட்டமாக கூடும் புல்புல் பறவைகளை பிடித்து சில மூலிகைகளை உண்ண வைக்கிறார்கள். இதை உண்ணும் அப்பறவைகள் தானாகவே சண்டைக்குத் தயாராகி விடுவதாகக் கருதப்படுகிறது. இது காம்ரூப் மாவட்டத்தின் ஹுஜாவில் அமைந்துள்ள பிரபல ஹைகீரிவ மாதவ் கோயில் பகுதியில் நடத்தப்படு கிறது. இதிலும், புல்புல்கள் படுகாயம் அடைவதுடன் உயிரிழப்பதும் வழக்கம்.

இவ்விரு வகையான சண்டைகளும் மிருகவதை தடைச் சட்டம் 1960-ன் கீழ் வருவதாகக் கூறி இந்திய விலங்குகள் நல வாரியம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதையடுத்து, ஜல்லிக்கட்டுடன் இதுபோன்ற சண்டை மற்றும் விலங்குகளின் பந்தயங்களுக்கும் உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு மே 7-ம் தேதி தடை விதித்தது.

இந்தத் தீர்ப்பை மேற்கோள் காட்டி, இந்திய விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் சி.கல்யாணசுந்தரம் உட்பட பல்வேறு பொது மற்றும் விலங்குகள் நல அமைப்புகள் அசாம் முதல்வர் தருண் கோகாய்க்கு கடந்த வாரம் கடிதம் எழுதி உள்ளனர். அதில் எருமை மற்றும் புல்புல் பறவைகளின் சண்டையை பிகு விழாவின் போது நடத்த அனுமதிக்கக் கூடாது எனக் கோரியுள்ளனர். எனினும், இந்த தடையை மீறி அசாமில் இருசண்டைகளும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் ஹட்குரி கிராம எருமைகள் சண்டை கமிட்டியின் தலைவர் நாத்துராம் அசாரிகா கூறும் போது, “உச்ச நீதிமன்ற தடை குறித்து எங்களுக்கு எந்த தகவலும் இல்லை. இதன் மீது மாநில அரசின் விதிமுறைகளும் அளிக்கப்படவில்லை. எனவே, வழக்கம் போல் வரும் 16-ம் தேதி எருமைகள் சண்டை நடைபெறும். இது சுமார் 17 ஆம் நூற்றாண்டு முதல் நடைபெற்று வருகிறது. இதில் வெல்லும் எருமையின் உரிமையாளருக்கு வழக்கமாக அளிக்கும் கோப்பையுடன் இந்த வருடம் ரூ.7,000 ரொக்கமும் அளிக்கப்பட உள்ளது” என்றார்.

புல்புல் பறவைகளின் சண்டை பற்றி ஹைகீரிவ மாதவ் கோயிலின் பூசாரி எஸ்.பி.சர்மா கூறும்போது, “அசாமை ஆண்ட அஹோம் மன்னர்கள் காலத்திலிருந்து இந்த புல்புல் பறைவகளின் சண்டை நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் இந்த பறவைகளைக் கொண்டு வந்து சண்டைக்கு விடுவார்கள். அதன் பிறகு இந்தப் பறவைகள் காட்டில் பறக்க விடப்பட்டு விடுவதால் அவற்றுக்கு எவ்வித தீங்கும் இழைக்கப்படுவதில்லை” என நியாயப்படுத்துகிறார்.

பிஹாரில் பல நூற்றாண்டுகளாக டிசம்பர் மாதங்களில் நடைபெற்று வரும் ‘சோன்பூர் மேளா’ எனும் விலங்குகள் சந்தையிலும் வழக்கமாக நடைபெற்று வந்த குதிரை, யானை உட்பட பல் வேறு வகையான விலங்குகளின் பந்தயமும், உச்ச நீதிமன்ற தீர்ப்பால் இந்த முறை நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x