Published : 08 Feb 2014 12:34 PM
Last Updated : 08 Feb 2014 12:34 PM

மாணவன் நிடோ மரணம் தேசிய அவமானம்: மோடி பேச்சு

அருணாச்சல் மாணவர் நிடோ டானியம் டெல்லியில் இனவெறி தாக்குதலுக்கு பலியான சம்பவம் தேசிய அவமானம் என பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மணிப்பூர் தலைநகர் இம்பாலில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் நரேந்திர மோடி பங்கேற்றார்.

பாஜக பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பின்னர் அவர் முதல் முறையாக இம்பாலில் பிரச்சாரம் செய்கிறார்.

மோடி பேசியதாவது: "வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூருக்கு வருகை தந்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி. வடகிழக்கு மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் இனவெறி தாக்குதலில் பலியானது தேசத்தின் அவமானம். அந்த சம்பவம் வருத்தம் அளிக்கிறது. அந்த மாணவனின் கும்பத்தாருக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன். டெல்லியில் ஆட்சி நிர்வாக குறைபாடுகளே மாணவன் மரணத்திற்கு காரணம்.

எல்லை பாதுகாப்பு விஷயங்களில் மத்திய அரசு போதிய கவனம் செலுத்துவது இல்லை. எல்லைகளை அண்டை நாடுகளுக்கு தாரை வார்க்க தயாராக இருக்கிறது மத்திய அரசு. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அர்சிடம், சரியான எல்லை பாதுகாப்பு கொள்கை இல்லாத காரணத்தால், மியான்மர் போன்ற அண்டை நாடுகளுக்கு, எல்லைப்பகுதிகள் பெருமளவில் தாரை வார்க்கப்பட்டு வருகின்றன.

மணிப்பூரில் பெண்கள், இளைஞர் மேம்பாட்டு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதே போல் இம்மாநிலத்தில் பெருகி வரும் போதைப்பொருள் கடத்தலை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. வடகிழக்கு மாநிலங்கள் வளர்ச்சியில் மிகவும் பின் தங்கி இருக்கின்றன.

பிரதமர் மன்மோகன் சிங், ராஜ்யசபாவிற்கு வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றில் இருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு இதுவரை என்ன செய்துள்ளார். வடகிழக்கு மாநிலங்கள் போல் எந்த பகுதியும் நாட்டில் பின் தங்கியில்லை. பாஜக ஆட்சிக்கு வந்தால், வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கை எடுக்கும் என உறுதி அளிக்கிறேன்" என்றார்.

மோடி வருகைக்கு முன் தாக்குதல்

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இம்பாலில் பிரச்சாரம் மேற்கொள்ள வருவதற்கு சில நிமிடங்கள் முன் பாதுகாப்பு வாகனத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த தாக்குதலில், அசாம் ரைபில்ஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவர் கொல்லப்பட்டார், பாதுகாப்பு வீரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x