Published : 22 Jan 2015 08:51 AM
Last Updated : 22 Jan 2015 08:51 AM
டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 3 முக்கிய கட்சிகளின் முதல்வர் வேட்பாளர்களான கிரண்பேடி, அஜய் மாக்கன், அர்விந்த் கேஜ்ரிவால் ஆகியோர் நேற்று வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.
வேட்பாளர் அர்விந்த் கேஜ்ரிவால், புதுடெல்லி தொகுதி யில் வேட்புமனுவை தாக்கல் செய்தார். பிறகு செய்தியாளர் களிடம் பேசிய கேஜ்ரிவால், “நான் முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் மக்கள் என் மீது கோபமாக இருந்தனர். ஆனால் தற்போது கோபம் தணிந்து மீண்டும் ஆம் ஆத்மி கட்சிக்கு தனிப் பெரும்பான்மையுடன் வாய்ப்பளிக்க முடிவு செய்துவிட்டனர் ” என்றார்.
பாஜக முதல்வர் வேட்பாளரான கிரண்பேடியும் நேற்று மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் மற்றும் தனது ஆதரவாளர்களுடன் ஊர்வலமாகச் சென்று கிருஷ்ணாநகர் தொகுதியில் மனு தாக்கல் செய்தார்.
அப்போது கிரண் பேடி செய்தியாளர்களிடம் கூறும்போது, “ மத்தியில் மோடியின் ஆட்சியை போல் டெல்லியிலும் ஆட்சி அமைய வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர்” என்றார்.
அஜய் மாக்கன் மனு தாக்கல்
காங்கிரஸ் சார்பில் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப் படவில்லை என்றாலும் தேர்தல் பொறுப்பாளரான அஜய் மாக்கன் இக்கட்சியின் முதல்வர் வேட்பாளராக கருதப்படு கிறார்.
இவர் நேற்று தனது சதர் பஜார் தொகுதியில் மனு தாக்கல் செய்தார். அப்போது செய்தியாளர் களிடம் அஜய் மாக்கன் கூறும் போது, “கிரண் பேடி, கேஜ்ரிவால் ஆகிய இருவருக்கும் ஆட்சி அனுபவம் கிடையாது. காங்கிரஸ் கட்சியால் மட்டுமே டெல்லி வாசிகளுக்கு நன்மைகளை செய்ய முடியும்” என்றார்.
இறுதி நாளில் இரு வேட்பாளர் மாற்றம்
வேட்பு மனு தாக்கலுக்கான கடைசி நாளான நேற்று மெஹ ரோலி மற்றும் முண்ட்கா ஆகிய இரு தொகுதிகளின் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்கள் மாற்றப் பட்டனர். இவர்கள், மோடியின் பிரச்சாரக் கூட்டத்தில் உதவி புரிந்த தாக புகார் எழுந்ததை அடுத்து அக்கட்சியின் உயர்நிலைக்குழு இந்த முடிவை எடுத்தது.
கடந்த 14-ம் தேதி தொடங்கிய வேட்புமனு தாக்கல் நேற்றுடன் முடிவடைந்தது. வரும் 22-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. மனுக்களை வாபஸ்பெற 24-ம் தேதி கடைசி நாளாகும்.
டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கும் பிப்ரவரி 7-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. பிப்ரவரி 10-ம் தேதி முடிவுகள் வெளியாகின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT