Last Updated : 23 Dec, 2014 05:13 PM

 

Published : 23 Dec 2014 05:13 PM
Last Updated : 23 Dec 2014 05:13 PM

வளர்ச்சியிலும் நல்லாட்சியிலும் கவனம் செலுத்துங்கள்: எம்.பி.க்களுக்கு மோடி அறிவுரை

நாட்டின் வளர்ச்சி மற்றும் நல்லாட்சியில் கவனம் செலுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

எதிர்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு மக்களவை நடைமுறைகளுக்கு இடையூறு விளைவித்த போதும் நாடாளுமன்றத்தை ‘வெற்றிகரமாக நடத்திச் சென்றதை’ மக்களிடம் எடுத்துச் செல்லவும், இந்தக் கூட்டத்தொடரில் பலத்த இடையூறுகளுக்கு இடையிலும் தாக்கல் செய்யப்பட்ட மசோதாக்கள் பற்றியும் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டியது அவசியம் என்றும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

பாஜக நாடாளுமன்றக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, மாநிலங்களில் கட்சியை வலுப்படுத்தவும், வளர்ச்சி மற்றும் நல்லாட்சி ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறும் எம்.பி.க்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

டிசம்பர் 25ஆம் தேதி வாஜ்பாயி பிறந்த நாளை முன்னிட்டு “நல்லாட்சி தினம்” அனுசரிக்கப்படுவதையடுத்து அன்றைய தினத்திற்கான திட்டங்களையும் விவாதித்தார் மோடி.

மதமாற்ற விவகாரம் மாநில அரசுகளின் பொறுப்பு

மதமாற்ற விவகாரத்தில் அரசால் செய்ய முடிந்தது ஒன்றுமில்லை என்றும், மதமாற்ற விவகாரம் மாநில அரசுகளின் பொறுப்பு என்றும் வெங்கைய நாயுடு பாஜக எம்.பி.க்களிடம் தெரிவித்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.

"இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட பல விஷயங்களில், ஒன்று டிசம்பர் 25ஆம் தேதி ‘நல்லாட்சி தினம்’ அனுசரிக்கப்படுவதும், அன்றைய தினத்துக்கான நிகழ்ச்சித் திட்டங்கள் பலவும் விவாதிக்கப்பட்டன.” என்று மத்திய இணை அமைச்சர் ராஜீவ் பிரதாப் ரூடி கூட்டத்திற்கு பிறகு தெரிவித்தார்.

மேலும், பாஜக, அனைத்து மதங்களுக்குமான மரியாதையை பெரிதும் மதிக்கும் கட்சி என்றும், ஆகவே கட்சி எம்.பி.க்கள் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் எம்.பி.க்கள் பங்கேற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது மூத்த தலைவர்களான அத்வானி, அருண் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா சுவராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x