Last Updated : 07 Dec, 2014 11:21 AM

 

Published : 07 Dec 2014 11:21 AM
Last Updated : 07 Dec 2014 11:21 AM

ஜிசாட்-16 செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியது இந்தியா

தொலைத்தொடர்பு வசதியை மேம்படுத்த வகை செய்யும் இந்தியாவின் ஜிசாட்-16 செயற்கைக்கோள் நேற்று அதிகாலை 2.10 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.

பிரெஞ்சு கயானாவில் உள்ள கொரூ ராக்கெட் ஏவுதளத்திலிருந்து ஏரியான் 5 ராக்கெட் மூலம் இந்த செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட 32-வது நிமிடத்தில் இந்த செயற்கைக்கோள் அதன் சுற்றுவட்டப் பாதையில் வெற்றிகரமான நிலைநிறுத்தப்பட்டது.

3,181 கிலோ எடை கொண்ட ஜிசாட்-16 செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கான 48 டிரான்ஸ்பான்டர்களை கொண்டது. இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) தயாரித்த தகவல் தொடர்பு செயற்கைக்கோள்களில் இதுவே மிகப்பெரியது.

ஜிசாட்-16 விண்ணில் ஏவப்பட்ட பிறகு, கர்நாடக மாநிலம், ஹாசனில் உள்ள இஸ்ரோ தலைமை அலுவலக கட்டுப்பாட்டு அறை, இந்த செயற்கைக்கோளை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. முதற்கட்ட சோதனையில் இந்த செயற்கைக்கோளின் செயல்பாடுகள் சீராக இருப்பதாக இஸ்ரோ தெரிவித்தது.

மேலும் செயற்கைக்கோளை அதன் சுற்றுவட்டப்பாதையில் இருந்து முதல்முறையாக உயர்த்தும் பணி திங்கள்கிழமை அதிகாலை 3.50 மணிக்கு நடைபெறும் என்றும் இஸ்ரோ கூறியது.

ஜிசாட்-16 செயற்கைக்கோளை கடந்த வெள்ளிக்கிழமை விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மோசமான வானிலை காரணமாக இதன் பயணம் 1 நாள் தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் இப்பயணம் வானிலை காரணங்களுக்காக மேலும் ஒருநாள் தள்ளிவைக்கப்பட்டு, இறுதியாக ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 2.10 மணிக்கு ஏவப்பட்டது.

இந்த செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள 46 டிரான்ஸ்பாண்டர்களின் உதவியால் தொலைக்காட்சி, வானொலி சேவைகள், பெரிய அளவிலான இணையப் பயன்பாடு, தொலைபேசி இயக்கங்கள் மேம்படும் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

சுமார் ரூ.880 கோடி செலவிலான ஜிசாட்-16 செயற்கைக்கோளுடன் டைரக் டி.வி. என்ற அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோளையும் ஏரியான் 5 ராக்கெட் விண்ணில் செலுத்தியது. இந்நிலையில் விண்ணுக்குப் புறப்பட்ட 28-வது நிமிடத்தில் அமெரிக்க நிறுவனத்தின் செயற்கைக்கோளும், 4 நிமிடங்களுக்குப் பிறகு இந்திய செயற்கைக்கோளும் ஏவப்பட்டன.

ஜிசாட்-16-ஐயும் சேர்த்து இதுவரை 18 செயற்கைக்கோள்கைளை இஸ்ரோவுக்காக ஏரியான் விண்ணில் செலுத்தியுள்ளது.

பிரதமர் மோடி வாழ்த்து

இதனிடையே ஜிசா-16 செயற்கைக்கோள் வெற்றிகரமான விண்ணில் செலுத்தப்பட்டதற்கு விஞ்ஞானிகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“ஜிசாட்-16 செயற்கைக்கோள் வெற்றிகரமாக ஏவப்பட்டதற்கு நமது விஞ்ஞானிகளை பாராட்டுகிறேன். இந்த செயற்கைக்கோள் நமது விண்வெளித் திட்டத்தின் முக்கிய சொத்தாக மாறும்” என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x