Published : 07 Apr 2014 11:28 AM
Last Updated : 07 Apr 2014 11:28 AM

வாக்குப்பதிவு இயந்திர ஒப்புகை சீட்டு தவறாக இருந்தால் புகார் கூறலாம்: தேர்தல் ஆணையம் ஏற்பாடு

வாக்காளர்கள் தங்களின் வாக்கு சரியாகப் பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்துகொள்ளும் வகையில் துண்டுச்சீட்டு வழங்கும் முறை சோதனை அடிப்படையில் வரும் தேர்தலில் அறிமுகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் தாங்கள் வாக்களித்த சின்னமும் துண்டுச் சீட்டில் வரும் சின்னமும் வெவ்வேறாக இருந்தால் வாக்காளர்கள் புகார் அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

துண்டுச் சீட்டு முறை அறிமுகம் செய்வதையொட்டி தேர்தல் விதிகளில் தேர்தல் ஆணையம் சமீபத்தில் திருத் தங்கள் செய்துள்ளது. இந்த விதிமுறைகள் அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதில் மேற்கண்ட விவரம் தெரிய வந்துள்ளது. வாக்காளர்கள் புகார் அளிக்கும் போது, உறுதிமொழிப் படிவம் ஒன்றையும் பூர்த்தி செய்து அளிக்க வேண்டும். மேலும் தங்கள் புகாரை நிரூபிக்கும் வகையில் சோதனை வாக்குப் பதிவுக்கும் அவர்கள் தயாராக இருக்கவேண்டும்.

வாக்காளர்கள் உள்நோக்கத் துடன் புகார் அளிப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் ஆணையம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளது.

சோதனை வாக்குப் பதிவில் வாக்காளர்களின் புகார் தவறு எனத் தெரியவந்தால், அவர்கள் மீது தவறான தகவலை அளித்த தற்காக இந்திய தண்டனைச் சட்டம் 177-ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும். 6 மாத சிறை அல்லது ரூ.1000 அபராதம் விதிக்க இந்தப் பிரிவு வகை செய்கிறது. இந்த எச்சரிக்கை உறுதிமொழிப் படிவத்தில் தரப்பட்டிருக்கும்.

இதுகுறித்து தேர்தல் ஆணைய அதிகாரி ஒருவர் கூறுகையில், “தவறான தகவலை தடுப்பதற்காக இந்த விதி சேர்க்கப்பட்டிருந்தாலும். இதை நாங்கள் மிக அரிதாகவே பயன்படுத்துவோம். துண்டுச் சீட்டு முறையில் வாக்களார்களின் புகார்களை நாங்கள் தடுக்க விரும்பவில்லை” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x