Last Updated : 01 Dec, 2014 09:14 PM

 

Published : 01 Dec 2014 09:14 PM
Last Updated : 01 Dec 2014 09:14 PM

மகாராஷ்டிரத்தில் நவம்பர் மாதம் மட்டும் 120 விவசாயிகள் தற்கொலை: சமூக ஆர்வலர்

மகாராஷ்டிர மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் கடன் தொல்லை தாங்க முடியாமல் 120 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டதாக சமூக தொண்டர் கிஷோர் திவாரி தெரிவித்துள்ளார்.

வறட்சியால் பாதிக்கப்பட்ட விதர்பா மற்றும் மராத்வாதா பகுதியில் இந்தத் தற்கொலைகள் நடந்துள்ளதாக, விதர்பா ஜன் ஆந்தோலன் சமிதி தலைவர் கிஷோர் திவாரி தெரிவித்தார்.

மேலும் அதிர்ச்சிகரமாக, கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 24 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிறார் இவர். இதுவரை இல்லாத அளவுக்கு விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியில் சராசரியாக நாளொன்றுக்கு 4 விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதாக அவர் கூறுகிறார்.

பருத்தி, மற்றும் சோயாபீன் விவசாயிகள் பெரும்பாலும் தற்கொலை செய்து கொள்கின்றனர். இதுவல்லாது பிற பணப்பயிர் மற்றும் பழங்கள் பயிரிடும் விவசாயிகளும் கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

“வறட்சியினால் ரூ.60,000 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று நாங்கள் மதிப்பிடுகிறோம், ஆனால் மத்திய அரசிடம் மாநில அரசு ரூ.4000 கோடி நிவாரணம் கேட்டுள்ளது. இது எப்படி போதுமானதாக இருக்கும்?” என்று மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கூற்றை முன்வைத்து கிஷோர் திவாரி கேள்வி எழுப்புகிறார்.

இதே சமிதியின் செயலர் மோகன் ஜாதவ் இந்த ஆண்டு இன்றைய தேதி வரை விதர்பாவில் 1000-த்திற்கும் மேற்பட்ட விவசாயிகளும், மராத்வாதாவில் 1,200 விவசாயிகளும் தற்கொலை செய்து கொண்டுள்ளனர் என்கிறார்.

“உடனடி நிவாரணமாக ரூ.60,000 கோடி தேவை. பயிர் நஷ்டத்திற்கு ரூ.20,000 கோடியும், கடும் வறட்சி நிலைமைகளை சமாளிக்க ரூ.20,000 கோடியும், விவசாயக்கடன் ரூ.20,000 கோடியும் தள்ளுபடி செய்யப்பட வேண்டும்” என்றார் மோகன் ஜாதவ்.

தொடரும் விதர்பா, மராத்வாதா விவசாயிகளின் துயரம்:

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் விவசாயத்தில் நஷ்டம் அடைந்த சோயாபீன் விவசாயி ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை தனது நிலத்தில் தீக்குளித்து இறந்தார்.

இதன்மூலம் விதர்பா பகுதியில் கடந்த 50 நாட்களில் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்துள்ளது.

விதர்பா பகுதியில் அகோலா மாவட்டம், மனார்கெட் என்ற கிராமத்தைச் சேர்ந்த விவசாயி காசிராம் (76). இவரது ஓர் ஏக்கர் நிலத்தில் வழக்கமாக 10 குவின்டால் சோயாபீன் விளைவது வழக்கம். இந்நிலையில் இந்த ஆண்டு கடும் நோய் பாதிப்பு காரணமாக ஒன்றரை குவின்டால் மட்டுமே விளைந்தது. இந்த நட்டத்தால் மனமுடைந்த காசிராம், கடந்த வெள்ளிக்கிழமை தனது நிலத்தில் எஞ்சிய பயிருக்கு தீமூட்டி, அத்தீயில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

விதர்பா பகுதியில் இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் மழையளவும் குறைவு. இதனால் இப்பகுதியில் 7 ஆயிரம் கிராமங்களை வறட்சியால் பாதிக்கப்பட்ட கிராமங்களாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது. இப்பகுதியில் நீர்ப்பாசன வசதி இல்லாத நிலையில், குறைந்த மழைப்பொழிவு காரணமாக நிலங்கள் முற்றிலும் வறண்டுவிட்டன.

எனவே கடந்த பல ஆண்டுகளைப் போலவே இந்த ஆண்டும் இப்பகுதி விவசாயிகள், வறட்சி, விளைச்சல் பாதிப்பு, கடன் நிலுவை என்ற சுழலில் சிக்கியுள்ளனர். கடனை திரும்ப செலுத்த முடியாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வது இப்போது மீண்டும் அதிகரித்துள்ளது.

காசிராமை பொறுத்தவரை அவருக்கு கடன் நிலுவை கிடையாது. “அவர் இதுவரை ஒரு பைசா கூட யாரிடமும் கடன் வாங்கியதில்லை. கடன் வலையில் விழுவதை அவர் விரும்பமாட்டார். தொடர்ந்து விளைச்சல் பாதிப்பால் அவர் சில நாட்களாக மன உளைச்சலுடன் இருந்தார். திடீரென தற்கொலை முடிவுக்கு வந்துள்ளார்” என்று அவரது மகன் சாரங்கதார் கூறினார்.

விதர்பா பகுதியில் வறட்சியால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் கடந்த 10 ஆண்டுகளில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x