Published : 22 Apr 2014 08:33 PM
Last Updated : 22 Apr 2014 08:33 PM
நாடு தழுவிய அளவில் அதிகரித்து வரும் சாலை விபத்துகளைக் கட்டுப்படுத்துவதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்க குழு ஒன்றை அமைத்தது உச்ச நீதிமன்றம்.
பிரபல எலும்பு சிகிச்சை நிபுணர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் தொடர்ந்த பொது நல வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகாய் மற்றும் என்.வி. ரமணா அடங்கிய அமர்வு, இது தொடர்பான உத்தரவை இன்று (செவ்வாய்க்கிழமை) பிறப்பித்தது.
சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அளித்த புள்ளிவிவரங்களை மேற்கோள் காட்டிய நீதிபதிகள், 1970-2010 ஆண்டுகளுக்கு இடையே சாலை விபத்துகளும், அதில் பலியானவர்கள் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தனர்.
2010-ஆம் ஆண்டில் மட்டும் 4,30,654 விபத்துகள் நடந்துள்ளன. இதில் 1,26,896 பேர் பலியாகியுள்ளனர். 4,66,600 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களிள் கை, கால்களை இழந்தவர்கள் எண்ணிக்கையும் அதிகம்.
தேசத்தில் ஒவ்வொரு நிமிடத்திற்கு ஒரு சாலை விபத்து நிகழ்வதாகவும், 4 நிமிடத்திற்கு ஒருவர் சாலை விபத்தில் பலியாகிறார் என்றும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
தனது உத்தரவில் நீதிபதி கோகாய் கூறும்போது, "சாலை விபத்துக்கள் மனிதர்கள் உயிர் வாழ மிகப் பெரிய சவாலாக உள்ளது. இதற்கு உடனடி தீர்வு காண்பது அவசியமானதாகும். மத்திய மற்றும் மாநில அரசுகள் நெடுஞ்சாலைகளை ஒழுங்காகப் பராமரித்து விபத்துகளை தடுக்க வேண்டும் என்பது குடிமக்கள் குறைந்தபட்சம் எதிர்பார்க்கக் கூடிய ஒன்று. எனவே, பாதுகாப்பான சாலைப் போக்குவரத்தை உறுதிப்படுத்துவது மத்திய மற்றும் மாநில அரசுகளின் கடமை" என்றார்.
உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள இந்தக் குழுவில், மே 14-ஆம் தேதி ஓய்வு பெறும் உச்ச நீதிமன்ற நீதிபதி கே.எஸ்.ராதாகிருஷ்ணன் இடம்பெறுவார். இவருடன், முன்னாள் போக்குவரத்துத் துறை செயலாளர் எஸ். சுந்தர், டெஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் டாக்டர். நிஷி மிட்டல் ஆகியோரும் செயல்படவுள்ளனர்.
இந்தக் குழு மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து தகவல்களைப் பெற்று, நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு விதிகளின் நிலையைப் பற்றியும், விபத்துகளைத் தடுப்பதற்கு உரிய பரிந்துரைகளையும் அறிக்கையாக சமர்பிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT