Published : 16 Dec 2014 11:01 AM
Last Updated : 16 Dec 2014 11:01 AM

மதமாற்ற நிகழ்ச்சியைத் தடுக்க அலிகரில் 144 தடை உத்தரவு: உ.பி. அரசுக்கு முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகள் நெருக்கடி

உத்தரப்பிரதேச மாநிலத்தில், கிறிஸ்துமஸ் தினத்தில் நடைபெறவுள்ள மதமாற்ற நிகழ்ச்சியைத் தடுக்க அம்மாநில அரசு அலிகரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. இதையடுத்து நீதிமன்றத்தை நாட, இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன.

வரும் கிறிஸ்துமஸ் தினத்தில், சுமார் 5,000 கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை இந்து மதத்துக்கு மாற்றும் நிகழ்ச்சிக்கு இந்து அமைப்புகள் திட்டமிட்டுள்ளன. இங்குள்ள தனியார் கல்லூரி ஒன்றில், ‘இந்து தேசிய பாதுகாப்பு யாகம்’ நடத்த இந்து ஜாக்ரன் சமிதி திட்டமிட்டுள்ளது. இதற்கு, பஜ்ரங்தளம் மற்றும் இந்து ஜாக்ரன் மன்ச் உட்பட பல அமைப்புகள் உதவி செய்ய உள்ளன. இந்த அமைப்பினரால், ஆக்ராவில் நடத்தப்பட்ட மதமாற்ற நிகழ்ச்சி சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், மதக்கலவரம் அதிக அளவு நடைபெறும் அலிகரில் மதமாற்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டால், பெரும் பதற்றம் உருவாகும் என அஞ்சப்படுகிறது.

இதனால் அந்நிகழ்ச்சியை நடத்த விடக் கூடாது என உத்தரப்பிரதேச அரசுக்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. முஸ்லிம்களின் முக்கிய அமைப்பான அகில இந்திய முஸ்லிம் தனிச்சட்ட வாரியம், அலிகர் முஸ்லிம் பல்கலை மாணவர் அமைப்பு, நகர மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயங்கள் உட்பட பல்வேறு அமைப்புகள் இந்த மதமாற்ற நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்கக் கூடாது என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி வருகின்றன. எனவே, உத்தரப்பிரதேச அரசு அலிகரில் நேற்று முதல் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இது குறித்து ‘தி இந்து’விடம் அலிகர் மண்டல டிஐஜி மோஹித் அகர்வால் கூறும்போது, “கிறிஸ்துமஸ் வரை அலிகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் மதமாற்றம் சார்ந்த எந்த நிகழ்ச்சிகளுக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. அனுமதியின்றி நடத்துவதால் ஏற்படும் பதற்றத்தைத் தவிர்க்க, இங்கு 144 தடையுத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 4 பேருக்கும் அதிகமாக யாராவது ஒன்று கூடினால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் பஜ்ரங்தளம் பிரிஜ் மண்டல தலைவர் அபிஷேக் ரஞ்சன் ஆர்யா கூறும்போது, “நம் நாட்டில் வேற்று மதங்களுக்கு மாறியவர்கள் இந்துவாக மீண்டும் வீடு திரும்ப அதிகாரம் உள்ளது. சட்டப்படி அவர்களாக முன் வந்து மாற விரும்புபவர்களுக்காக நடக்க இருக்கும் நிகழ்ச்சிக்கு தடை விதிக்க முயல்கிறார்கள். உத்தரப்பிரதேச அரசு முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்களின் முகவர் போல செயல்படுவது தவறு. இதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

இதுதொடர்பாக பிரிஜ் மண்டலத்தின் சங்பரிவார அமைப்புகள் கூடி நாளை (இன்று) இறுதி முடிவு எடுக்கவுள்ளன” என்றார்.

இந்த அமைப்பினர் கிறிஸ்தவர்களை, கிறிஸ்துமஸ் தினத்தில் மதமாற்றம் செய்வது அலிகருக்குப் புதிது அல்ல. கடந்த 2 ஆண்டுகளில் 4,000 கிறிஸ்தவரக்ளை மீண்டும் இந்துக்களாக மாற்றியிருப்பதாக கடந்த செப்டம்பர் 1-ம் தேதி ‘தி இந்து’ நாளிதழில் விரிவான செய்தி வெளியாகி இருந்தது. கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து கிறிஸ்துமஸ் தினத்தில் இவர்கள் மதமாற்றத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x