Published : 26 Feb 2014 12:00 AM
Last Updated : 26 Feb 2014 12:00 AM
பிரதமர் மன்மோகன் சிங்கை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டி.ஆர்.எஸ்) தலைவர் சந்திரசேகர ராவ் தனது கட்சியினருடன் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார்.
நாடாளுமன்றத்தில் தெலங்கானா மசோதா நிறைவேற மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்த இவர்கள், புதிய மாநிலம் தொடர்பான விஷயங்களை விவாதித்தனர்.
இது தொடர்பாக டி.ஆர்.எஸ். எம்.பி. ஜகந்நாத் கூறுகையில், “பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதுதான் எங்கள் சந்திப்பின் முக்கிய நோக்கம். என்றாலும் தெலங்கானா பகுதியில் நிலவும் மின்தட்டுப்பாடு, புதிய மாநிலத்தில் எய்ம்ஸ் போன்ற மத்திய அரசு நிறுவனங்களை அமைப்பது, காஸ் ஒதுக்கீடு, ஹைதராபாத் நகரின் சர்வதேச பெருமையை காப்பதில் மத்திய அரசின் உதவி, மாநிலத்தில் நிலவும் மின்தட்டுப்பாடு என பல்வேறு விஷயங்களை எழுப்பினோம்” என்றார்.
ஜகந்நாத் மேலும் கூறுகையில், “தெலங்கானா ராஷ்டிர சமிதியை காங்கிரஸ் கட்சியுடன் இணைப்பதா அல்லது கூட்டணி அமைப்பதா என்பது தொடர்பான முடிவு உரிய நேரத்தில் எடுக்கப்படும். இது தொடர்பான பேச்சுவார்த்தைக்கு ஏற்படும் உடன்பாட்டுக்கு ஏற்ப இது முடிவு செய்யப்படும்” என்றார்.
டி.ஆர்.எஸ். எம்.பி. வினோத் குமார் கூறுகையில், “காங்கிரஸுடன் இணைவது அல்லது கூட்டணி அமைப்பது என 2 வாய்ப்புகளையும் ஆராய்ந்து வருகிறோம்” என்றார். அவர் மேலும் கூறுகையில், “காங்கிரஸ் கட்சியுடன் இணைவதன் மூலம் தெலங்கானா பகுதியை நாங்கள் மேம்படுத்த முடியும். அதேவேளையில் தேர்தல் நெருங்கிவிட்டதால் தற்போதைக்கு கூட்டணி வைத்துக்கொண்டு தேர்தலுக்குப் பிறகு இணைப்பு குறித்து ஆராயலாமா என்றும் யோசிக்கிறோம்.
காங்கிரஸுடன் இணைவதை விட கூட்டணி அமைப்பதையே பெரும்பாலான தொண்டர்கள் விரும்புகின்றனர். என்றாலும் புதிய மாநிலத்தை வளர்ச்சியுறச் செய்யும் பணிக்கு சந்திரசேகர ராவ் தலைமையேற்க வேண்டும் என்பதே எங்கள் கட்சியின் விரும்பம்” என்றார்.
தெலங்கானா மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பிறகு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஞாயிற்றுக்கிழமையும், துணைத் தலைவர் ராகுல் காந்தியை திங்கள்கிழமையும் சந்திரசேகர ராவ் சந்தித்துப் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT