Last Updated : 15 Dec, 2014 10:57 AM

 

Published : 15 Dec 2014 10:57 AM
Last Updated : 15 Dec 2014 10:57 AM

நான்காம் கட்டத் தேர்தல்: காஷ்மீரில் 49%; ஜார்க்கண்டில் 63%

ஜம்மு- காஷ்மீர், ஜார்க்கண்டில் நேற்று நான்காம் கட்ட சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில் காஷ்மீரில் 49 சதவீத வாக்குகளும் ஜார்க்கண்டில் 63 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஜம்மு-காஷ்மீர் மாநில சட்டப்பேரவையின் பலம் 87 ஆகும். இதில் இதுவரை மூன்று கட்டங்களாக 49 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. நான்காம் கட்டமாக நேற்று ஸ்ரீநகர் உட்பட 18 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது. முதல்வர் ஒமர் அப்துல்லா, முன்னாள் முதல்வர் முப்தி முகமது சையது உட்பட மொத்தம் 182 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தலைப் புறக்கணிக்க வேண்டும் என்று தீவிரவாதிகள் எச்சரிக்கை விடுத்திருந்தபோதிலும் பொதுமக்கள் பெருமளவில் திரண்டு வந்து வாக்களித்தனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் முதியோரும் பெண்களும் நீண்ட வரிசையில் காத்திருந்து ஜனநாயக கடமையாற்றினர்.

தேசிய மாநாட்டு கட்சித் தலைவரும் தற்போதைய முதல்வருமான ஒமர் அப்துல்லா, பீர்வாஹ், சோனவார் ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிடுகிறார்.

இதில் பீர்வாஹ் தொகுதியில் கடந்த 9-ம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. சோனவார் தொகுதியில் நேற்று வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்தத் தொகுதியில் ஒமர் அப்துல்லாவுக்கும் மக்கள் ஜனநாய கட்சி வேட்பாளர் அஷ்ரப் மிர்ருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

மக்கள் ஜனநாயகக் கட்சியின் மூத்த தலைவர் முப்தி முகமது சையது பிஜ்பிஹரா தொகுதியில் போட்டியிடுகிறார். அந்தத் தொகுதியிலும் நேற்று விறுவிறுப்பான வாக்குப் பதிவு நடைபெற்றது.

தீவிரவாதிகள் அச்சுறுத்தல் காரணமாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதனால் வாக்குப் பதிவு அமைதியாக முடிந்தது. மொத்தம் 49 சதவீத வாக்குகள் பதிவாகின.

காஷ்மீரில் முதல் இரண்டு கட்ட வாக்குப் பதிவுகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளும் மூன்றாம் கட்ட வாக்குப் பதிவில் 58 சதவீத வாக்குகளும் பதிவாகின.

ஜார்க்கண்டில் 63% வாக்குப் பதிவு

ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 81. இதில் இதுவரை மூன்று கட்டங்களாக 50 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றுள்ளது. நான்காம் கட்டமாக நேற்று 15 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நடைபெற்றது.

ஜார்க்கண்ட் விகாஸ் மோர்சா தலைவரும் முன்னாள் முதல்வருமான பாபுலால் மராண்டி உள்பட மொத்தம் 217 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

வாக்குப்பதிவு நடைபெற்ற 15 தொகுதிகளில் பெரும்பான்மை பகுதிகள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்தவை ஆகும். அந்தப் பகுதிகளில் மிக அதிகபட்சமாக 60 சதவீத வாக்குகள் பதிவாகின.

ஒட்டுமொத்தமாக 15 தொகுதிகளிலும் 63 சதவீத வாக்குகள் பதிவாகின. இதில் ஆண்களைவிட பெண்கள் வாக்குகள் 2 சதவீதம் அதிகமாகும் என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

இரு மாநிலங்களிலும் இறுதிகட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 20-ம் தேதி நடைபெறுகிறது. டிசம்பர் 23-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x