Published : 08 Apr 2014 11:14 AM
Last Updated : 08 Apr 2014 11:14 AM

ஜம்மு - காஷ்மீரில் துப்பாக்கிச் சூடு: ராணுவ வீரர் உயிரிழப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் - பாதுகாப்புப் படையினர் இடையே நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும், போலீஸ் அதிகாரி ஒருவரும் பலியாகினர். இத்தாக்குதலில் ஒரு பயங்கரவாதியும் சுட்டுக்கொல்லப்பட்டார்.

குப்வாரா மாவட்டம் ஜுனாரிஷி பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை ராணுவத்தினரும், காவல்துறையினரும் சுற்றி வளைத்தனர். இந்த கூட்டு நடவடிக்கை நேற்று (திங்கள் கிழமை) இரவு தொடங்கியது. இன்று பிற்பகல் வரை நடைபெற்ற கடும் துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரர் ஒருவரும், போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும் பலியாகினர்.

பலியான ராணுவ வீரர் மராத்தா லைட் இன்ஃபன்ட்ரி 19-வது படைப்பிரிவைச் சேர்ந்த கங்கன்வாடி என்றும், பலியான போலீஸ் காவல் உதவி ஆய்வாளர் ஹண்ட்வாரா சரக சிறப்பு நடவடிக்கைகள் குழுவைச் சேர்ந்தவர் என்றும் அடையாளம் தெரியவந்துள்ளது.

4 பேர் காயம்:

தாக்குதலில் இரண்டு காவலர்களும், ராணுவ அதிகாரி ஒருவரும் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் துருக்முல்லா பகுதி ராணுவ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காவலர் கவலைக்கிடம்

இதற்கிடையில், அனந்தநாக் மாவட்டம் லால்சவுக் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட காவலர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஸ்ரீநகர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக தெற்கு காஷ்மீர் டிஐஜி விஜயகுமார் கூறினார். காவலரிடம் இருந்த துப்பாக்கியை பயங்கரவாதிகள் பறிமுதல் செய்ததாகவும் அவர் தெரிவித்தார்.

2 பேர் சிறை?

இதற்கிடையில், பயங்கரவாதிகளுக்கு எதிரான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஈடுபட்ட போலீஸ்காரர்களில் 2 பேர் காணாமல் போனதாக காவல்துறை தரப்பு தெரிவித்துள்ளது. காணாமல் போன இரண்டு காவலர்களும் பயங்கரவாதிகளால் சிறை பிடிக்கப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x