Last Updated : 19 Dec, 2014 11:45 AM

 

Published : 19 Dec 2014 11:45 AM
Last Updated : 19 Dec 2014 11:45 AM

ஜார்க்கண்ட், காஷ்மீரில் நாளை இறுதிக் கட்ட தேர்தல்

ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களில் நாளை 5-வது, இறுதி கட்ட தேர்தல் நடைபெறு கிறது. இதற்கான தேர்தல் பிரசாரம் நேற்றுடன் ஓய்ந்தது.

ஜார்க்கண்ட்டில் மொத்தம் 16 சட்டப் பேரவை தொகுதிகளில் காலை 7 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் 7 தொகுதிகள் மலைவாழ் மக்களுக்காக ஒதுக்கப்பட்டதாகும்.

16 தொகுதிகளில் மொத்தம் 208 பேர் போட்டியிடுகின்றனர். இவர்களில் 16 பேர் மட்டும் பெண்கள் என்று தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

ஜார்க்கண்ட் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன் போட்டியிடும் தும்கா தொகுதி, அம்மாநில சட்டப் பேரவைத் தலைவர் சசாங் சேகர் போகத் போட்டியிடும் போரியோ தொகுதி, சோரனின் உறவினர் சீதா முர்முனீ சோரன் போட்டியிடும் ஜாமா தொகுதி ஆகியவை நாளை வாக்குப் பதிவு நடைபெறும் தொகுதிகளில் முக்கியமானவையாகும்.

இறுதி கட்ட தேர்தல் நடைபெறும் 16 தொகுதிகளிலும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது. பாஜக 15 தொகுதிகளில் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளது.

ஜம்மு காஷ்மீரில்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நாளை இறுதிக் கட்டமாக 20 தொகுதிகளில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதில் துணை முதல்வர் தாரா சந்த், அமைச்சர் லால் சர்மா உள்ளிட்டோர் முக்கிய வேட்பாளர்கள் ஆவர். கடந்த 4 கட்ட தேர்தல்களை விட இறுதி கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு அதிகம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தலை சீர்குலைக்கும் வகையில் பாகிஸ்தான் தீவிரவாதி கள் ஜம்மு மாவட்டத்தில் தாக்குதல் நடத்தி 5 பொதுமக்களையும், 3 ராணுவ வீரர்களையும் கொன்றனர். அதன்பிறகு நடைபெற்ற 3-வது கட்ட தேர்தலில் வாக்குப் பதிவு சற்று குறைந்தது.

காஷ்மீர் தேர்தலில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜேட்லி, ராஜ்நாத் சிங், சுஷ்மா, ஸ்மிருதி இராணி, உமா பாரதி உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர் களை ஆதரித்து தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x