Published : 10 Dec 2014 08:39 AM
Last Updated : 10 Dec 2014 08:39 AM
ஜார்க்கண்ட் மாநில சிறையில் இருந்து 20 விசாரணைக் கைதிகள் நேற்று தப்ப முயன்றனர். இவர்களில் 5 பேர் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தனர்.
போலீஸார் மீது மிளகாய்ப் பொடியை வீசிவிட்டு 15 பேர் தப்பி ஓடிவிட்டனர். இவர்களில் 7 பேர் மாவோயிஸ்ட்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து சுமார் 150 கி.மீ.தொலைவில் உள்ள சாய்பாசா கிளை சிறையில் நேற்று மாலை 4 மணி அளவில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து சம்பவம் நடந்த மேற்கு சிங்பூம் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டு மாவட்டம் முழுவதும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
சாய்பாசா சிறையில் இருந்த கைதிகளில் 51 பேர் நேற்று காலை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர். அவர்களில் மாவோயிஸ்ட்கள் சிலரும் இருந்தனர். மாலையில் மீண்டும் அவர்களை சிறைக்கு கொண்டு வந்தனர். வேனில் இருந்து இறங்கி சிறையின் பிரதான வாயில் வழியாக கைதிகளை போலீஸார் அழைத்துச் சென்றனர். அப்போது, திடீரென 20 கைதிகள் போலீஸாரின் பிடியில் இருந்த தப்பி ஓடத் தொடங்கினர்.
மிளகாய்ப் பொடி வீச்சு
அவர்களை போலீஸார் விரட்டிச் சென்றனர். அப்போது அவர்களில் சிலர் தங்கள் கையில் வைத்திருந்த மிளகாய்ப் பொடியை போலீஸாரை நோக்கி வீசினர். இதனால் போலீஸார் நிலை குலைந்தனர். கைதிகளை விரட்டிச் சென்று பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதையடுத்து போலீஸார் துப்பாக்கியால் சுட்டு கைதிகளை பிடிக்க முடிவெடுத்து, ஓடிக் கொண்டிருந்தவர்களை நோக்கி சுட்டனர். இதில் 5 கைதிகள் குண்டுகள் பாய்ந்து உயிரிழந்தனர்.
கொல்லப்பட்டவர்களில் இருவர் தீப தாஸ், ராம் விலாஸ் டாதி என அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர்கள் இருவரும் மாவோயிஸ்ட்கள்.
மாவோயிஸ்ட் சதியா?
தங்கள் சகாக்களை தப்பிக்க வைக்க மாவோயிஸ்ட்கள் திட்ட மிட்டு இந்த சம்பவத்தை நிகழ்த் தியிருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. எனினும் இதில் வெளியில் இருந்து யாரும் கைதிகளுக்கு உதவவில்லை. கைதிகள் தங்களுக்குள்ளேயே திட்டமிட்டு இந்த சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர் என்பது பின்னர் உறுதி செய்யப் பட்டது.
சிறை அதிகாரிகள் கவனக் குறைவாக இருந்ததால்தான் கைதிகளுக்கு மிளகாய்ப் பொடி கிடைத்துள்ளது என்று போலீஸ் தரப்பில் குற்றம்சாட்டப் பட்டுள்ளது. மிளகாய்ப்பொடியை முகத்தில் தூவியதால்தான் போலீஸாரால் விரைந்து செயல் பட்டு கைதிகளை பிடிக்க முடிய வில்லை. கைதிகளுக்கு மிளகாய்ப்பொடி கிடைத்தது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தப்பியோட முயன்ற 31 கைதிகள் மீண்டும் பத்திரமாக சிறையில் அடைக்கப் பட்டனர்.
தேடுதல் வேட்டை
தப்பியோடிய 15 கைதிகளை யும் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சம்பவம் நடந்த மேற்கு சிங்பூம் மாவட்ட எல்லைகள் சீல் வைக்கப்பட்டுள்ளன. தப்பியவர் களில் மிகக் கொடூரமான குற்றங் களை செய்த மாவோயிஸ்ட்களும் அடங்குவர் என்பதால் முழு வீச்சில் தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
எனினும் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 கைதிகள் உயிரிழந்தனர் என்பதை போலீஸார் உறுதிப் படுத்தவில்லை. 2 கைதிகள் மட்டும்தான் உயிரிழந்தனர். 3 பேர் குண்டு காயமடைந்தனர் என்று காவல் துறை உயரதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT